மங்கையர் மலர்

அன்பான ஆசிரியப் பெருந்தகைகளே! இந்தக் கட்டுரை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்!

ஆசிரியர் தினம் – செப்டம்பர் 05

ஆதிரை வேணுகோபால்

ன் அப்பா சுங்கவரி இலாகா அதிகாரி என்பதால் எனது பள்ளி மற்றும் கல்லூரி பருவம் பாண்டிச்சேரி, எடப்பாடி மேட்டூர், தர்மபுரி, வளவனூர், விழுப்புரம் இப்படி  பல ஊர்களில். அதனால் ஒரு ஆசிரியருக்கு மட்டும் நன்றி சொல்வது என்பது முடியாத காரியம்.

பாண்டிச்சேரியில் ஹிமாக்குலேட் பள்ளியில் என் கையைப் பிடித்து உயிரெழுத்தை கற்றுக் கொடுத்த எலிசபெத் டீச்சர். என் தாய்க்கு இணையானவர்.. தாய்மொழியை எனக்குள் விதைத்தவர்.
அழகான வெள்ளை நிற பருத்தி புடவை உடுத்தி கொண்டையிட்டு கழுத்தில் சிலுவைச் செயின் அணிந்து அவர் நடந்து வரும் அழகே அழகு இன்னமும் கண் முன்னால் அழகாய்!

எடப்பாடி அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளி' ஐந்தாம் வகுப்பு 'ஆ'பிரிவு' தமிழ், ஆங்கிலம், அறிவியல், வரலாறு கணிதம் இப்படி அனைத்துக்கும் ஒருவரே டீச்சர். அவர்தான் கனகா டீச்சர் ! தினம் ஒரு (புடவையின் நிறத்துக்கு பொருத்தமாக) ரோஜா அவர்கள் கொண்டையில் அழகாய் வீற்றிருக்கும். என் கையெழுத்தை இன்று பலரும் பாராட்டுகிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் கனகா டீச்சர்தான். என் கையைப் பிடித்து (அப்போதெல்லாம் கையெழுத்து ஏடு என்று ஒன்று இருக்கும் இரண்டு வரிகள்' தமிழுக்கு', நான்கு வரிகள் 'ஆங்கிலத்திற்கு' என்று அதில் தினமும் எழுதி வர வேண்டும்) 'ஓ',ழ',ஐ என்ற எழுத்துக்களை எல்லாம் இப்படித்தான் எழுதவேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுத்தவர் அவர்!

வளவனூர் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு 'ஆ 'பிரிவு உடற்பயிற்சி ஆசிரியை ஜானகி அவர்கள் எனக்கு புத்தகம் வாசிக்க கற்றுக் கொடுத்தவர். அப்பொழுதெல்லாம் பள்ளிகளுக்கு இடையே கட்டுரை போட்டி, கவிதை போட்டி, பேச்சு போட்டி, தனித்திறன் போட்டி என்று பல போட்டிகள் நடக்கும். மாவட்ட வாரியாக பல பள்ளிகள் கலந்து கொள்ளும். அப்போதெல்லாம்  போட்டிகளில் கலந்து கொள்ளச் சொல்லி என்னை உற்சாகப்படுத்துவார். பல புத்தகங்களை எனக்கு  பரிந்துரைத்து, “வாசிப்பு என்பது பரந்து பட்டதாக இருக்க வேண்டும். வெறும் கதை புத்தகம் வாசிப்பதில் மட்டும் பயனில்லை. வரலாறு அறிவியல் இவற்றோடு வாழ்வியல் சார்ந்த புத்தகங்களையும் வாசிக்க வேண்டும்” என்பார்.

காஞ்சனாமாலா

தர்மபுரி அவ்வையார் அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 1986 ல் +2 படித்தபோது வரலாற்று ஆசிரியையாக இருந்தவர் காஞ்சனாமாலா  அவர்கள். மெலிந்த தேகம், பருத்தியிலான புடவை, வட்ட வடிவ மூக்கு கண்ணாடி... பார்ப்பதற்கு மிகவும் அமைதியா, சாதுவாக இருக்கும் அவர்... பாடம் எடுக்கையில் (ஜான்சிராணியாக) கம்பீரமாக மாறிவிடுவார். 

முதலாம் பானிபட் போர், இரண்டாம் பானிபட் போர், குப்தர்களின் ஆட்சி காலம் பொற்காலம்.,ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஆகத்து புரட்சி... இப்படி ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளையும் கண் முன்னே காட்சிகள் வருமாறு வர்ணனைகளோடு பாடம் எடுப்பதில் வல்லவர். கூடவே அது சம்பந்தமாய் நினைவில் வைத்துக்கொள்வதற்காக குட்டி குட்டிக் கதைகளை அழகாகச் சொல்லுவார். நம் மனதில் அந்த நிகழ்வுகள் அப்படியே 'பச்சக்' என்று ஒட்டிக்கொள்ளும்.

ஒரு முறை "எவ்வளவுதான் சரியாக (தவறில்லாமல்) எழுதினாலும் முழு மதிப்பெண் பெற முடியவில்லையே? வரலாற்று நிகழ்வுகளின் வருடங்கள் சரியாக நினைவுக்கு வருவதில்லையே...  வருடங்களை சரியாக நினைவில் வைத்துக் கொண்டு எப்படி எழுதுவது? ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்” என்று அவரிடம் புலம்பினேன்.

அவர் உடனே, “வருடங்களை நினைவில் வைத்துக்கொள்ள ஓர் உபாயம் இருக்கிறது” என்றுசொல்லி, “அந்த வருடம் மற்றும் நாட்களை உன் வாழ்க்கையோடு தொடர்பு படுத்திக் கொண்டு பார். எப்பவும் மறக்காது” என்றார்.

“முதலாம் பானிபட் போர் ஏப்ரல் 21 1526 ஏப்ரல் 21 யாருக்காவது பிறந்த நாள் அல்லது ( 2+1=3) இரண்டையும் ஒன்றையும் கூட்டினால் வரும் பிறந்தநாள் தேதி. (என் பிறந்த நாள் 03.) இப்படி ஏதாவது உன் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி  வைத்துக்கொண்டால் அந்த தேதியும், வருடமும் மறக்காது” என்றார்.

அது என் மனதில் பசுமரத்தாணிப் போல் பதிந்துவிட்டது.

(இப்போதெல்லாம்  லாக்கர்எண் / வங்கிக் கணக்கு எண் / முக்கியமான தொலைபேசி எண் / பாஸ்வேர்டு... இப்படி எந்த எண்ணை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றாலும் இப்படித்தான் நான் தொடர்பு படுத்திப் பார்த்து நினைவில் வைத்துக்கொள்கிறேன்.)

அது மட்டுமல்ல...இன்று நான் பல மேடைகளில் தன்னம்பிக்கை கூறும் கருத்துக்களைச் சொல்லும்பொழுது அதைக் குட்டி குட்டிக் கதைகள் மூலம் கூறுகிறேன் என்றால் அவர்கள்தான் காரணம்.

விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்த போது எனக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்த எர்னஸ்டு ராஜா சார், தமிழரசு சார் இருவரும் என் அறிவு கண்ணைத் திறந்தவர்கள்.  படிப்பின் மேல் ஆர்வத்தை தூண்டச் செய்தவர்கள். (இந்த இடத்தில் பெருமையாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். படித்து முடித்து முப்பது வருடங்கள் ஆனாலும் இன்னமும் என் ஆசிரியர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளார்கள். எனது மகளின் திருமணத்திற்கு வந்திருந்து ஆசிர்வாதம் செய்தார்கள். இதைவிட வேறென்ன பாக்கியம் வேண்டும் ஒரு மாணவியாக எனக்கு!)  எனது கட்டுரை எந்த பத்திரிகையில் வந்திருந்தாலும் படித்து விமர்சனம் செய்ய தயங்க மாட்டார்கள். அதேபோல் தொலைக்காட்சியில் நான் கலந்து கொள்ளும் சமையல் சார்ந்த/பொதுவான நிகழ்வுகளை பார்க்க நேர்ந்தால் அலைபேசியில் உடனே பாராட்டி விடுவார்கள். என்னை உற்சாகப்படுத்துவதில் பெற்றோருக்கு அடுத்தபடியாக இருப்பவர்கள் இவர்கள்தான்.

கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் பொழுது பிசினஸ் மேக்ஸ் பாடத்திற்கு  சந்திரபாபு சார் என்பவரிடம் டியூஷனுக்கு சென்றேன். வீட்டில்/ வெளியிடங்களில்  பெரியவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும்? பேசும்பொழுது மட்டுமல்ல உள்ளுக்குள்ளும் நெகட்டிவ் வார்த்தைகளை பயன்படுத்துவதை  தவிர்ப்பது எப்படி? மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? ...முகத்தை எப்போதும் எப்படி புன்னகையுடன் வைத்துக்கொள்வது... மகிழ்ச்சி என்பது நமக்கு வெளியில் இல்லை நம் மனதில்தான் இருக்கிறது என்று கணக்குப் பாடங்களோடு வாழ்வியல் பாடத்தையும் கற்றுக் கொடுத்தவர் அவரே.

சந்திரபாபு

அன்றாட வாழ்க்கையில் தினம் தினம் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களிடமும்  ஏதோ ஒரு சில விஷயங்களை கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். இப்படி என் வாழ்க்கையில் நிறைய பேருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இதேபோல் நீங்களும் உங்கள் வாழ்வில் உங்களை கை தூக்கி விட்ட ஆசிரியர்களுக்கு மனதார வாழ்த்துகளையும் நன்றிகளையும் சொல்லுங்கள். வாழும்போதே சொர்க்கத்தை காணலாம்.
அனைத்து ஆசிரிய பெருந்தகைகளுக்கு இந்த மாணவியின்  சிரம் தாழ்ந்த பணிவான வணக்கங்கள். உங்களையெல்லாம் மறந்தால்தானே... நினைப்பதற்கு!

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

SCROLL FOR NEXT