பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் சமீபத்தில் அளித்த பேட்டியில்,
“கடந்த 10 வருட காலமாக, என்னுடைய திரைப்பயணத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதால் எனது குடும்பத்தினர், பெற்றோர்கள், நண்பர்கள், சகோதரி ஆகியோர்களுடன் அதிக நேரம் செலவிட இயலவில்லை. நடிப்பில் சிறந்து விளங்குவதற்காக, தூக்கம், குடும்பத்துடன் நேரம் செலவிடுவது போன்ற பலவித தியாகங்களைச் செய்யத் தயாராக இருந்தேன். ஆனால், தற்சமயம் அன்புக் கணவர் ரன்பீர் கபூர் மற்றும் மகள் என எனக்கென்று குடும்பமிருப்பதால், முன்புபோல் சில தியாகங்களைச் செய்ய முடியவில்லை. எனினும், குடும்பம், திரைத்துறை இரண்டையும் சமமாக பிரித்து கவனம் செலுத்தி வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.
வருகின்ற 28ஆம் தேதி, வயாகாம் 18, தர்மா புரொடக் ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படம் திரைக்கு வருகிறது. கரண் ஜோஹர் இயக்கியுள்ள இப்படத்தில் அலியாபட் ஜோடியாக ரன்வீர் சிங் நடித்துள்ளார்.
இது எனது முடிவு; கணவரின் தலையீடு இல்லை!
‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘வேலாயுதம்’ போன்ற படங்களில் நடித்த ஜெனிலியா சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். ‘வேத்’ மராத்தி படத்தில் நடித்திருக்கிறார். சினிமாவில் மீண்டும் என்ட்ரி ஆனது குறித்து ஜெனிலியா கூறியது:
“என்னை படத்தில் நடிக்க, என் கணவர்தான் அனுமதி தரவில்லை” என மக்கள் கூறி வருவது உண்மையில்லை. ஒரே நேரத்தில் குடும்பத்தையும், திரைத்துறையையும் சரியாக பார்க்க முடியாது என்று எனக்குத் தோன்றியதால், இடைவெளி விட நான்தான் முடிவெடுத்தேன். என் குழந்தைகளுடன் இருப்பதை விரும்பினேன். இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். என்னிடம் எந்தத் தேவைகளையும் எதிர்பார்க்கவில்லை.
கல்லூரியில் படித்த நாளிலிருந்து இப்படித்தான் இருக்க வேண்டுமென்று தீர்மானிப்பது கிடையாது. நான் என்ன செய்ய விரும்பிகிறேனோ, அப்போது அதை தேர்வு செய்வேன். இனிமேல் தொடர்ந்து படங்களில் நடிப்பேன்.”
ஹேமமாலினியின் மனம் திறந்த பேச்சு!
இந்திய சினிமாவின் ‘கனவுக்கன்னி’ என்று புகழ் பெற்ற நடிகை ஹேமமாலினி 1980ஆம் ஆண்டு பாலிவுட்டின் முன்னணி நடிகராக விளங்கிய தர்மேந்திராவைக் காதல் மனம் புரிந்தார்.
தர்மேந்திராவுக்கு ஏற்கெனவே திருமணமாகி நான்கு குழந்தைகள் இருந்தபோதும், துணிச்சலுடன் அவரை ஹேமமாலினி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு, கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். தர்மேந்திரா – ஹேமமாலினி தம்பதியருக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தன.
பல வருடங்களாக இவர்கள் இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதுபற்றி ஹேமமாலினி முதல்முறையாக மனம் விட்டுப் பேசியுள்ளதாவது:
“எந்தப் பெண்ணும், தன் கணவரைப் பிரிந்து வாழ நினைப்பதில்லை. ஆனால், தானாக ஏதாவது நடந்தால், அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். ஒவ்வொரு பெண்ணும், ஒரு சாதாரணக் குடும்பத்தையும் கணவனையும் பெரிதும் விரும்புகிறாள். எனக்கு எது கிடைக்க வேண்டுமோ, அது கிடைத்ததில் மிகவும் மகிழ்வாக இருக்கிறேன். எங்களது மகள்கள் இஷா மற்றும் அஹானாவிற்கு சிறந்த, பாசமுள்ள தந்தையாக தர்மேந்திரா விளங்கினார். இரு பெண்களுக்கும் நல்ல துணை கிடைக்க வேண்டுமென்கிற அவரது விருப்பத்தைச் சிறப்பாகச் செய்தார்”.
தர்மேந்திரா – ஹேமமாலினி பிரிந்து வாழும் விஷயம் குறித்து இதுவரை இருவருமே மனம் திறந்து பேசியாது கிடையாது. இப்போது ஹேமமாலினி மறைமுகமாக ஒப்புக்கொண்டு இதை தெரிவித்துள்ளார்.