கொலு பொம்மை விற்பனை 
மங்கையர் மலர்

மயிலாப்பூர் வீதியை அலங்கரிக்கும் கொலு பொம்மைகள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

வராத்திரி பண்டிகைக்கான ஆயத்தம் களைகட்ட தொடங்கிவிட்டது. சென்னை, மயிலாப்பூரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்து இறங்கியுள்ளன. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவிற்காக மயிலாப்பூர் மாடவீதிகளின் நடைபாதைகளில் கொலு பொம்மை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிசைத் தொழிலாக பொம்மைகள் செய்து வர்ணம் தீட்டி விற்பனைக்கு வந்துள்ள பொம்மைகள் மிகவும் அழகாக காட்சியளிக்கின்றன.

உங்களிடம் பாரம்பரியமான பொம்மைகள் இருக்கின்றனவா? அவற்றில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா கவலை வேண்டாம்.மயிலாப்பூரில் பழைய பொம்மைகளுக்கு வர்ணம் தீட்டி புதுசு போல அளிக்கும் கடைகளும் இங்கு உள்ளன. எந்த வகையான பொம்மையாக இருந்தாலும் அவற்றை சீரமைத்து வர்ணம் தீட்டி புதுசு போலவே செய்து கொடுக்கிறார்கள் மயிலாப்பூர் சித்ர குளம் அருகே உள்ள கடையில்.

கொலு பொம்மை கடை

நூறு வருடங்களைத் தாண்டிய பொம்மைகளை பத்திரமாக பாதுகாக்கும் மக்கள் அவற்றில் ஏதேனும் கீறலோ, வர்ணம் குறைந்தோ விட்டால் உடனே இங்கு வந்து சரி செய்து கொண்டு சென்று விடுகிறார்கள். உடைந்த பொம்மைகளைக் கூட இங்கு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து தரும் கலைஞர் சித்ர குளம் அருகே உள்ளார். அப்படி உடைந்த பொம்மைகளை சரி செய்து தரும்போது மக்களின் கண்களில் தெரியும் சந்தோஷத்திற்கு ஈடு இணை இல்லை என்கிறார் இவர்.

சென்னையின் பலபகுதிகளில் இருந்தெல்லாம் பொம்மைகள் வாங்க மக்கள் இங்கு வந்து குவிக்கின்றனர். கொலு பொம்மைகள் விற்பனை ஆரம்பித்துவிட்டது. அதுவும் மயிலாப்பூரின் நான்கு மாட வீதிகளிலும். குறிப்பாக வடக்கு மாட வீதியில் நடக்கக்கூட இடமில்லாமல் விதவிதமான பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் ஆழ்வார்கள், நாயன்மார்கள், தசாவதார தொகுப்பு, அஷ்ட லட்சுமிகள், ஸ்ரீராமர், ராவணன் போன்ற கடவுள் பொம்மைகள் விதவிதமாக கண்ணை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.

தெருக்களை அடைத்து நான்கு மாட வீதிகளிலும் கொலு பொம்மைக் கடைகள். காலையிலும் மாலையிலும் பொம்மைகளை வாங்கவும், விண்டோ ஷாப்பிங் செய்யவும் ஏகப்பட்ட மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். தி.நகர் போல் இங்கும் மக்கள் வெள்ளம் அலை கடல் போல் திரண்டு வருகிறது.

காகிதக் கூழ், மண் பொம்மைகள், கருங்கல், மரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன. 50 ரூபாயில் தொடங்கி பதினெட்டாயிரம் ரூபாய் வரை விதவிதமான சைஸ்களில் பொம்மைகள் விற்கப்படுகின்றன. அத்தி வரதர், திருப்பதி பாலாஜி, பார்த்தசாரதி பெருமாள், காமதேனு,  துல்ஜாபூர் பவானி, சாய்பாபா போன்ற கடவுள்களும், அப்துல் கலாம், சுவாமி விவேகானந்தர், புத்தர், காந்தி போன்ற இந்திய தலைவர்களின் பொம்மைகளும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், செட்டியார் பொம்மைகளும் விற்பனையில் களைகட்டுகின்றன.

பொம்மைகளின் விலைகள் சற்று அதிகம்தான். இருந்தாலும் இங்கு வரும் மக்கள் பொம்மைகளை நன்கு பேரம் பேசி வாங்குகின்றனர். கொலு பொம்மை படிகளும் மரத்திலும், ஸ்டீலிலும் விற்பனையாகின்றன ஸ்டீல் பொம்மை படிகள் 3500 ரூபாய் என விற்கப்படுகிறது. இந்த பொம்மைகளை ஆன்லைனிலும் ஷாப்பிங் செய்கிறார்கள். தெரு முழுவதும் தற்காலிகமாக கடைகள் விரிக்கப்பட்டு விற்பனை ஜோராக நடைபெறுகிறது!

பிக்கி உண்டியலின் வரலாறு தெரியுமா?

வேகமாகச் சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

இன்சுலின் சுரப்பை இயற்கையாக சீராக்க உதவும் எளிய உணவுகள்!

உடலில் மருக்கள் இருந்தால் சாதாரணமாக நினைக்காதீங்க… ஜாக்கிரதை! 

கனக விநாயகர் கணக்கு விநாயகர் ஆன கதை தெரியுமா?

SCROLL FOR NEXT