மங்கையர் மலர்

கோவில் கோபுரத்தில் பனை சிற்பங்கள் – பனையின் பெருமை அறிய புதுமை முயற்சி.

சேலம் சுபா

ச்சி முதல் அடி வரை மனிதர்களின் பயன்பாட்டுக்காக கொடையாகத் தரும் அற்புதமான பனையை தற்போது புறக்கணித்து வருவதும் அதைத் தொழிலாக கொண்டவர்களும் சமூக ஆர்வலர்களும் அதன் சிறப்புகளை எடுத்துச் சொல்லி அதன் மீதான விழிப்புணர்வு தருவதையும் பார்த்து வருகிறோம்.

   மேலும்  தமிழ்நாட்டின் மாநில மரம் என்ற பெருமையும் கொண்ட பனையின் சிறப்பினை பொதுமக்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “நெட்டே நெட்டே பனை மரமே “ என்ற காலப்பேழை  புத்தகத்தை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று முன்திடம் வெளியிட்டு பனைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    பனையின் அத்தனை பாகங்களும் நமக்கு எப்படி உதவுகிறது தெரியுமா? பனைமரத்தின் குருத்தோலை தோரணம் கட்டவும் அழகியல் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. சாரை ஓலை கூடை முடையவும் பாய்கள் பின்னவும்  உதவுகிறது. பச்சை மட்டை வேலி அமைக்கவும் நார் எடுக்கவும் உதவுகிறது. பனங்காய் நமக்கு சுவையான  நுங்கும் பனம்பழமும் தருகிறது. பனங்கொட்டை பனங்கிழங்காக மாறி உண்ணப்படுகிறது. பாளை பதநீர் பெற உபயோகமாகிறது. ஓலை கூரை வேயவும், கஞ்சி போன்றவற்றை ஊற்றிக் குடிக்கவும்  மட்டைப் பின்னவும் பயன்படுகிறது. உச்சிப் பகுதி மரத்தொட்டி செய்ய உதவுகிறது. பத்தை மட்டை தும்பு எடுக்கவும். தரை தேய்க்கும் பிரஷ் செய்யவும் பயன்படுகிறது நடுமரம் உத்திரம் செய்ய உதவுகிறது. தூர்ப் பகுதி வட்ட வடிவிலான பத்தலாக பயன்படுகிறது. வேர் மழைக் காலங்களில் நிகழும் மண்ணரிப்பை தடுக்க உதவுகிறது.
      இப்படி கற்பக விருட்சமாய் பல்வேறு பலன்களை அள்ளித் தரும் பனைமரம் அழியும் நிலையில் உள்ளது. ஆகவே, இதை மீட்க இதன் சிறப்புகளை நாளைய தலைமுறை அறிந்து கொள்வது அவசியம் என்பதால். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடத்த கோவில் கும்பாபிஷேக விழாவில் பனை மரத்தோடு பனைத் தொழிலாளர்களின் சிற்பங்களும் அமைக்கப்பட்டு சமூக மேம்பாட்டு ஆர்வலர்கள் மற்றும் பலரின்  கவனத்தை ஈர்த்துள்ளது.

ராசிபுரம் அருகே கரையான் தின்னி புதூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஸ்ரீ ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஸ்ரீ கன்னிமார் சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. அப்போது கோவில் கோபுரத்திற்கு இணையாக அதற்கு அருகில் ஓலையுடன் கூடிய பனைமரம், நுங்கு குலை, பனைமரம் ஏறும் தொழிலாளர் சிற்பங்கள் தத்ரூபமாக வடிவமைத்து வைத்திருந்தது பார்வையாளர்களை வியப்பில ஆழ்த்தியது. இந்த சிற்பங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கு இருந்த  மக்கள் பயபக்தியோடு வழிபட்டனர்.

     இது குறித்து கிராமத்து பெரியவர்கள்  கூறியதாவது “தற்போது நாடு எந்த அளவுக்கு நவீன வளர்ச்சி அடைகிறதோ அந்த அளவிற்கு உணவு முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பழங்கால புராதான சின்னங்களை வருங்கால சந்ததியினர் மறந்து வருகிறார்கள். அவர்களுக்கு அவற்றை நினைவூட்டி கொண்டே இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. இதற்காகவே கோவில்களிலும் பொது இடங்களிலும் பல்வேறு சிற்பங்களை நமது முன்னோர் வடிவமைத்து வைத்துள்ளனர். அதேபோல் முன்னோர் வகுத்துக் கொடுத்த உணவு முறைகளும் ஆரோக்கிய வாழ்விற்கு வழிகாட்டி நமது உடலுக்கு வலுவூட்டியது. குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.

    கிராமப்புறங்களில் உடலுக்கு ஆரோக்கியத்தையும் குளிர்ச்சியையும் தரக்கூடிய பனை மரங்கள் அதிக அளவில் உள்ளது. மக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்த பனைமரம், தற்போது அழிவின் பிடியில்  உள்ளது. பனைமரத்தினை குலதெய்வமாக கொண்டு அந்த தொழில் ஈடுபட்ட ஏராளமான ஒரு மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். நாளுக்கு நாள் இயற்கையான பனைமர தோப்புகளை அளித்து கட்டிடங்களும் தொழிற் சாலைகளும் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் அற்புதமான பனைமரம் குறித்த விழிப்புணர்வு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உணர்த்த வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு நடக்கும் தொழில்களை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே இதை பிரதானமாக கொண்டு புதிய கோவிலில் பனைமரமும் நுங்கு குலையும் தொழிலாளர்களின் சிற்பமும்  வடிவமைத்துள்ளோம். இவைகள் இந்த கோவிலுக்கு வரும் குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் பதிந்து பனையின் சிறப்புகளை உணர்த்திக் கொண்டே இருக்கும் என்று நம்புகிறோம்.”என்றனர் .

   அழிந்து வரும் நம் பாரம்பர்யத்தை மீட்க ஆன்மீக வழியில் முயலும் இந்தக் கிராமத்து மக்களின் புதுமையான இந்த முயற்சிக்கு பல தரப்பினரும் பாராட்டுகளைத் தந்து வருகின்றனர்.

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

SCROLL FOR NEXT