சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் செயல்களைக் கண்டித்துள்ள இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு (OIC) இந்தியா குறித்து வெளியிட்ட அறிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
“இந்தியா தொடர்பாக OIC செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இது அவர்களின் வகுப்புவாத மனப்பான்மை மற்றும் இந்திய எதிர்ப்பு செயல்திட்டத்திற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு. இந்திய-எதிர்ப்பு சக்திகளால் தொடர்ந்து கையாளப்படுவதன் மூலம் மட்டுமே OIC அதன் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும், ”என்று வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார்.
ராம நவமியின் போது இந்தியாவில் பல மாநிலங்களில் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட வன்முறை மற்றும் நாசகார செயல்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் அறிக்கையை OIC வெளியிட்ட பிறகு இந்த எதிர்வினை நிகழ்ந்துள்ளது.
ரமலான் நோன்பு சமயத்தில் ஒரு மதரஸா எரிக்கப்பட்டது. இஸ்லாமிய வெறுப்பின் தெளிவான பிரதிபலிப்பு மற்றும் முஸ்லிம் சமூகத்தை திட்டமிட்டு இலக்கு வைப்பது போன்ற இத்தகைய வன்முறை மற்றும் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளை OIC பொதுச் செயலகம் கண்டிக்கிறது” என்று OIC அறிக்கை கூறுகிறது.
OIC என்பது 57 முஸ்லிம் நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவாகும்.
மேற்கண்ட அறிக்கை மூலமாக முஸ்லீம் சமூகத்தை குறிவைத்து நடத்தப்படும் வன்முறைச் செயல்களைத் தூண்டுபவர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அதிகாரிகளுக்கு OIC பொதுச் செயலகம் அழைப்பு விடுத்துள்ளது.
2022 டிசம்பரில் OIC-ன் பொதுச்செயலாளர் ஹுசைன் பிரஹிம் தலா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் சென்றபோது OIC பற்றி கடைசியாக இந்தியா பேசியது.
அப்போது, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு கஷ்மீர் தொடர்பான விஷயங்களில் OIC க்கு எந்த இடமும் இல்லை என்பதை இந்தியா வலியுறுத்ததியதுடன், OIC அல்லது அதன் பொதுச்செயலாளரால் இந்தியாவின் உள் விவகாரத்தில் தலையிடும் எந்தவொரு முயற்சியும் கண்டணத்துக்குரியது எனவும் அன்றே தெரிவித்திருந்தது. இப்போதும் கூட அப்பட்டமான பாகுபாடு கொண்ட வகுப்புவாத அணுகுமுறையை எடுத்ததன் மூலம் OIC அதன்
நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகக் கூறி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதன் நடவடிக்கைகளைக் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.