செய்திகள்

காதலியை திருமணம் செய்ய கொலைக் குற்றவாளிக்கு பரோல் வழங்கிய நீதிமன்றம்!

கல்கி டெஸ்க்

ர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆனந்த், கொலை செய்த குற்றத்துக்காக பத்து வருடம் சிறை தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளி ஆவார். கொலைக் குற்றத்துக்காக அவருக்கு முதலில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, பின்னர், அவரது நன்னடத்தையின் காரணமாக அது பத்து வருட சிறைத்தண்டனையாக குறைக்கப்பட்டது. இதில் அவர் ஏற்கெனவே ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டார்.

இந்த நிலையில் குற்றவாளி ஆனந்தின் தாயார் ரத்தினம்மாவும், காதலி நீதாவும் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், நீதா கடந்த ஒன்பது வருடங்களாக ஆனந்தை காதலிப்பதாகவும், முப்பது வயதான தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க தனது வீட்டார் முயற்சி செய்வதாகவும், எனவே தன்னை திருமணம் செய்துகொள்ள ஆனந்துக்கு பரோல் வழங்க வேண்டும்’ என்றும் அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.

ஆனந்தின் தாய் மற்றும் அவரது காதலியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. அப்போது அரசு கூடுதல் வழக்கறிஞர், "திருமணம் செய்துகொள்ள பரோல் வழங்குவதற்கு சட்டத்தில் எந்த விதியும் இல்லை" என்று நீதிமன்றத்தில் பதில் சமர்ப்பித்தார். ஆனாலும், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா, ’இதனை ஒரு அசாதாரண சூழ்நிலையாகக் கருதி, ஆனந்த் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள 15 நாட்கள் பரோலில் விடுவிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், "கைது செய்யப்பட்டவர் வேறு யாருடைய திருமணத்திலும் கலந்துகொள்ள விரும்பினால், அது வேறு சூழ்நிலையாக இருந்திருக்கும். ஆனால், இந்த அசாதாரண சூழலில் கைதியை பரோலில் விடுவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இல்லையெனில், அவர் தனது வாழ்க்கையின் அன்பை இழக்க நேரிடும். சிறையில் இருப்பதால், தனது காதலி வேறொருவரை திருமணம் செய்து கொள்ளும் வேதனையைத் தாங்க முடியாது. எனவே, மனுதாரர்களின் தரப்பை பரிசீலித்து, 05.04.2023 காலை முதல் 20.04.2023 மாலை வரை காவலில் உள்ள ஆனந்தை பரோலில் விடுவிக்குமாறு சிறைத்துறை, மத்திய சிறை, பரப்பன அக்ரஹாரா சிறைகளின் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் தலைமைக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. பரோலில் செல்பவர் சிறைக்குத் திரும்புவதை உறுதி செய்யவும், பரோல் காலத்தில் அவர் வேறு எந்தக் குற்றத்தையும் செய்யக் கூடாது என்பதற்காக வழக்கமாக விதிக்கப்படும் கடுமையான நிபந்தனைகளை விதிக்கவும் உத்தரவிடுகிறேன்" என்று அந்த நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவ மருந்து தவசிக்கீரை!

Bread Kulfi Recipe: பிரட் இருந்தால் போதும், வீட்டிலேயே செய்யலாம் சுவையான குல்பி!

இந்திய நேர மண்டலத்தால் சாதகமா? பாதகமா?

அதிக புரதம் நிறைந்த 10 சைவ உணவுகள்!

லகு நாரியல் என்றால் என்னவென்று தெரியுமா?

SCROLL FOR NEXT