ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றிப்பெற்று, எம்எல்ஏ.,வாக பதவியேற்றார்.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா நெஞ்சுவலி காரணமாக மறைவையடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது.
அண்மையில் நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த மார்ச் 15ம் தேதி மாலை திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் லேசான தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனையில் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 'ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கரோனரி தமனி நோய் மற்றும் லேசான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் நலமுடன் உள்ளார்' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.