மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இருக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர் மூன்மூன் சர்க்கார் தனது ஆட்டோவை புல்வெளி மற்றும் காற்றைச் சுத்திகரிக்கும் விதமான செடிகள் நிரம்பிய சிறு சிறு தொட்டிகளை வைத்து அலங்கரித்திருக்கிறார். தோட்டக்கலைத்துறை கல்லூரிகளிலும், தனியார் நர்ஸரிகளிலும் விற்கப்படும் இயற்கை புல்வெளிகளை மீட்டர் கணக்கில் விலைக்கு வாங்கி வந்து அவற்றை வெட்டி தனது ஆட்டோவின் தரைப்பகுதி மற்றும் மேல்தளத்தில் ஒட்டி மொத்த ஆட்டோவையும் குளுகுளுவென மாற்றியிருக்கிறார். வழக்கமான ஆட்டோ பயணங்களால் போரடித்துப் போயிருக்கும் மக்களுக்கு இது ஒரு சிறந்த மாற்று முயற்சியாகக் கண்ணில் பட்டிருக்கிறது.
பொதுவாக நாடு முழுவதுமாகவே ஆட்டோ பயணம் என்றாலே கர்பிணிகள் மற்றும் வயதானவர்களுக்கு ஒரு அச்சம் இருக்கும். மோசமான சாலைகளில் ஆட்டோ பயணம் மேற்கொள்ள நேர்ந்தால் கர்பிணிக்கு ஆட்டோவிலேயே பிரசவம் கூட ஆகி விடக்கூடும் எனும் பீதி நிலையில் தான் மக்களை வைத்திருக்கின்றன நமது மோசமான சாலைகள் மற்றும் போதிய பாதுகாப்பு வசதிகள் & பராமரிப்பில்லாத ஆட்டோக்கள். இந்நிலையில் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கொளுத்தும் வெயில் காலத்தில் தனது பயணிகளின் வசதிக்காக மொத்த ஆட்டோவையுமே காலநிலை மாற்றத்துக்கு தகுந்த வகையில் குளுகுளுவென மாற்ற முயற்சித்து அதில் வெற்றி கண்டிருப்பது அம்மாநில மக்கள் மத்தியில் மிகவும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ஆட்டோவில் கூடுதலாகச் செய்யப்பட்டிருக்கும் இந்த மாற்றங்களுக்காக மூன்மூன் சர்க்கார் தனிப்பட்ட கட்டணம் எதையும் வசூலிக்கவில்லை என்பது இதில் கூடுதல் சுவாரஸ்யம்! இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் இப்போதெல்லாம் இவரது ஆட்டோவையே பெரிதும் விரும்பி வருகிறார்களாம்.
தமிழில் மறைந்த நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு “சுந்தரா டிராவல்ஸ்” என்றொரு திரைப்படம் வெளிவந்திருந்தது. அதில் நகைச்சுவைக்காக ஒரு முழு பேருந்தையே இலை தழைகளைக்கட்டி மறைத்திருப்பார்கள். அந்த ஐடியா இன்று ஆட்டோ வரை பாய்ந்திருப்பது ஆச்சர்யம் தருகிறது. அதிலும் மேற்கு வங்கத்திலிருக்கும் ஒரு பெண் ஆட்டோ டிரைவர் வரை!