செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதுதான் புத்திசாலித்தனம்

கல்கி டெஸ்க்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா மறைவையொட்டி, அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குதான் ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதேபோல அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்குதான் ஈரோடு கிழக்கு ஒதுக்கப்பட்டது.

இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குதான் அந்த வாய்ப்பை திமுக வழங்கப் போகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினும் அதை விரும்புகிறாராம். காரணம், அவர்களின் கூட்டணி இன்னும் அதே நெருக்கத்துடன் இருக்கிறது. 

மற்றொரு புறம் அதிமுக கூட்டணியை பொருத்தவரை, உட்கட்சி பூசல் காரணமாக ஓபிஎஸ் அணி ஈபிஎஸ் அணி என்று இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. இது ஒரு புறம் இருக்க, இரட்டை இலை சின்னம் இருந்தால்தான் அதிமுகவால் ஜெயிக்க முடியும் என்கிற பிரச்னை அவர்களுக்கு. அதனால் அதிமுக போட்டியிட வாய்ப்பே இல்லை. 

அதே நேரத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் இப்போது எந்த அணி பக்கம் இருப்பார்கள் என்கிற கேள்வியும் உள்ளது. பாமக அதிமுகவிற்கு நேர் எதிராக சென்று விட்டது. 2024 பாராளுமன்ற தேர்தலையொட்டி திமுகவுடன் கைகோர்க்க அதனுடன் நெருக்கத்தில் நிற்கிறது. 

அதிமுக -பாஜக வார்த்தைப் போர் உச்சத்தில் இருக்கிறது. இரண்டாம் கட்டத் தலைவர்கள் பாஜகவை தாக்கிப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஜி.கே.வாசனைப் பொறுத்த வரையில் ஓபிஎஸ் உடன் நெருக்கத்தில் இருக்கிறார். இடைத்தேர்தல் அறிவிப்புக்குப் பின் இபிஎஸ்.யை சந்தித்து வந்திருக்கிறார் வாசன். இது ஆதரவு திரட்டும் சந்திப்பு என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

திமுக மீதுசரமாறி குற்றச்சாட்டுகளை வீசி வரும் பாஜக, இந்த தேர்தலில் தன் பலத்தை காட்ட நினைக்கிறது. வெற்றி என்பதை கடந்து, தனித்து நின்று தனது வாக்குவங்கியை நிரூபிக்க முயற்சிக்கிறது பாஜக. அதனால் பாஜக தனி வேட்பாளரை நிறுத்த வாய்ப்பிருக்கிறது. 

ஆக, இந்த தேர்தலில் திமுகவும், அதிமுகவும் நேரடி வேட்பாளர்களை களமிறக்கப் போவதில்லை. கூட்டணி கட்சியினர் தான், களம் காணப் போகிறார்கள்.

இந்த சூழலில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஆகியோர் நேரடியாக களம் கண்டால், கண்டிப்பாக அது அவர்களுக்கு பெரிய மாற்றத்தை தரலாம். 

கடந்த தேர்தலில், அதே ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் 10 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் வாங்கியிருக்கிறார்கள். இது அதிமுக தோல்விக்கு காரணமான ஓட்டுகளை விட அதிகமாகும்.  இந்த தேர்தலில் வெற்றி காங்கிரஸ் கட்சிக்கா? தமாகவிற்கா? அல்லது பாஜகவிற்கா? என்று தான் வரப்போகிறது.

போதாக்குறைக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தேர்தல் பணியாற்ற தொண்டர்களை இறக்கலாம். தங்கள் கொள்கையை திட்டங்களை மக்களிடம் நேரடியாக எடுத்துச் செல்லலாம். அவர்கள் இருவரும் போட்டியிட்டால் கண்டிப்பாக அவர்கள் தான் விஐபி வேட்பாளர்களாகவும் இருப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏதாவது திட்டமிருந்து, அதற்காக இந்த தேர்தலை அவர்கள் சாதாரணமாக எடுக்க நினைத்தால், அது கண்டிப்பாக அவர்களுக்கு தான் பின்னடைவை தரும்.

இது மாதிரியான ஒரு நல்ல வாய்ப்பை, நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

கவிஞர் கண்ணதாசனின் பாடலில் ஒரு குறை! எந்த பாடல்? என்ன நடந்தது?

உங்கள் மனநிலையில் திடீர் மாற்றம் ஏற்படுகிறதா? சோகமும் கோபமும் வாட்டுகிறதா? புறக்கணிக்காதீர்கள்!

அச்சச்சோ! மழைக்காலத்தில் சாதாரண ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துறீங்களா? போச்சு! 

கோபத்தை தணிக்க உதவும் வாழ்வியல் மந்திரங்கள்!

மாடித் தோட்டத்தில் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

SCROLL FOR NEXT