உலகின் பிரபலமான டெக் நிறுவனங்களான கூகுள் மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் தன் ஊழியர்களை பாரபட்சமின்றி கொத்து கொத்தாக பணியைவிட்டு நீக்கிவரும் நிலையில், அதில் பணிபுரியும் உயரதிகாரிகள் மட்டும் அதிகப்படியான சம்பள உயர்வை பெற்று வருகிறார்கள்.
தன் செலவை குறைப்பதற்காகதான் அதிகப்படியான ஊழியர்களை இவர்கள் பணி நீக்கம் செய்கிறார்கள் என்ற நிலையில் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு அதிக போனஸ் தருவது எப்படி சாத்தியமாகிறது என்ற கேள்வி எல்லா ஊழியர்களிடமும் இருக்கிறது. கூகுள் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சமீபத்தில் போராட்டத்தில் குதித்த சம்பவம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்நிலையில் தற்போது மெட்டா நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நேரடியாகவே மார்க் ஜுகர்பர்க்கிடம் கேள்விகளை கேட்டு வாதிட்டிருக்கிறார்கள்.
கடந்த வாரம் அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் மெட்டா நிறுவனம் தாக்கல் செய்த ஒரு அறிக்கையில், இந்த வருடம் மூத்த நிர்வாகிகளுக்கு எவ்வளவு போனஸ் அளிக்கப்பட்டது என்ற விவரங்களை வெளியிட்டிருந்தது. இதை அறிந்த ஊழியர்கள், மெட்டா நிறுவனத்தின் விர்ச்சுவல் கேள்வி/பதில் சமயத்தில், ஊழியர்களை பணி நீக்கும் நிலை உச்சத்தில் இருக்கும்போது, மூத்த அதிகாரிகளுக்கு மட்டும் எப்படி அதிகப்படியான போனஸ் அளிக்கிறீர்கள் என்று நேரடியாகவே கேட்டிருக்கிறார்கள்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் CXO பிரிவு அதிகாரிகளுக்கு அதிகப்படியான போனஸ் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான சூசன் லீ என்பவர் 575,613 டாலர் பணத்தை போனசாக பெற்று இருக்கிறார். அதேபோல் மெட்டாவின் தலைமை தயாரிப்பு அதிகாரியான க்ரிஸ் காக்ஸ் 950,214 டாலர்களை போனஸ் தொகையாக பெற்றிருக்கிறார். மேலும் அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, தலைமை இயக்க அதிகாரி, வியூக அதிகாரி என அனைவருமே அதிகப்படியான பணத்தை போனஸாக பெற்றிருக்கிறார்கள்.
மெட்டா நிறுவனத்தில் கிட்டத்தட்ட 20% ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த மூத்த நிர்வாக அதிகாரிகளுக்கு எப்படி நிர்வாகம் அதிகப்படியான ரேட்டிங் கொடுத்து போனஸ் கொடுத்துள்ளது எனவும், நிறுவன பங்குகளின் வீழ்ச்சிக்கு இவர்களுக்கு சம்பந்தம் இல்லையா எனவும் மெட்டா நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் நேரடியாக மார்க் ஜுகர்பர்கிடமே கேட்டிருக்கிறார்.