பத்து தல திரைப்படம் பார்க்க வந்த நரிக்குறவர் மக்களை சென்னையிலுள்ள ரோகினி தியேட்டர் நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்ற செய்தி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படம் நேற்று உலகெங்கிலும் வெளியானது. இந்நிலையில், இத்திரைப்படம் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரிலும் திரையிடப்பட்டது. இதைப் பார்க்க நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த, ஆண்கள், பெண்கள் மற்றும் அவர்களுடைய 10 வயது குழந்தை என அனைவரும் ரோகிணி திரையரங்கம் வந்திருந்தனர். கையில் படத்திற்கான டிக்கெட் வைத்திருந்த போதிலும், டிக்கெட் பரிசோதனை செய்யுமிடத்தில் பணியாளர் களால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியே செல்லும்படி வற்புறுத்தப்பட்டார்கள். இந்த சம்பவத்தை சுற்றி இருந்த பொதுமக்கள் செல்போனில் படம் எடுத்து இணையத்தில் போட்டு விட்டார்கள். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. பல பிரபலங்களும் பொதுமக்களும் ரோகினி நிர்வாகத்தை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி பிரகாஷ் ட்விட்டரில் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். "அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது. எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது" என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கமலஹாசன் தனது ட்விட்டர் பதிவில், "டிக்கெட் இருந்தும் நாடோடி பழங்குடியினருக்கு திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது" என பதிவிட்டிருந்தார்.
இது குறித்து விஜய் சேதுபதி செய்தியாளர் சந்திப்பில், "எப்பொழுதும் எங்கேயும் ஒரு மனிதனை ஒடுக்குவதும் தாழ்த்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது என்ன காரணமாக இருந்தாலும் சரி. அது எங்கு நடந்தாலும் சரி. இந்த பூமி மனிதர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்வதற் காகப் படைக்கப்பட்டது. அதில் வேற்றுமையை யார் எங்கு வந்து சொன்னாலும் அது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல", என்று தெரிவித்தார்.
மேலும் இயக்குனர் வெற்றிமாறனும், "நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்து எறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைப்பிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என தன் கண்டனத்தை பதிவிட்டிருந்தார்.
பின்னர் இதற்கு விளக்கம் அளித்த ரோகிணி தியேட்டர் நிர்வாகம், பத்து தல திரைப்படம் U/A சென்சார் பெற்றதால் குழந்தைகளுடன் வந்த அவர்களை எங்கள் நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளனர். U/A சென்சார் பெற்ற திரைப்படங்களை பெற்றோர்களுடன் குழந்தைகள் வந்தால் அனுமதிக்கலாம் என்ற விதி இருக்கும்போது, இப்படிப்பட்ட வினோதமான விளக்கத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ரசிகர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதுதொடர்பாக நரிக்குறவர் மக்களிடமே கேள்விகள் கேட்டபோது, இதுபோன்ற அவமதிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாகவும், நாங்கள் எங்கு சென்றாலும் எங்களை அனுமதிக்க தயங்குகிறார்கள் என்றும் தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பு வெளியான விஜய், அஜித் திரைப்படங்களுக்கும் எங்களை திரையரங்கில் அனுமதிக்கவில்லை என்று அவர்கள் தரப்பில் கூறினார்கள்.
இவர்களை உள்ளே அனுமதிக்காத ரோகினி தியேட்டர் பணியாளர்கள் இரண்டு பேர் மீதும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் (தாமாக வந்தாலும்) விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.