கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பல தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைப்பற்றினர்.
ஆலப்புழாவில் சிந்தூர், வந்தனம், வீயபுரம், ஓச்சிரா மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள எடவநாடு, ஆலுவா, வைப்பின் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. பிஎஃப்ஐ முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் நிசார் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் பலர் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த அமைப்பு எர்ணாகுளத்தில் உள்ள பெரியார் பள்ளத்தாக்கில் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது. பிஎஃப்ஐ கோட்டையாக இருந்த மற்ற மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த அமைப்பு எர்ணாகுளத்தில் 8 இடங்களிலும், ஆலப்புழா மற்றும் மலப்புரத்தில் தலா 4 இடங்களிலும், திருவனந்தபுரத்தில் 3 இடங்களிலும் சோதனை நடத்தியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழக பகுதிகளிலும், நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனையை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். கேரளாவிலும் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதேபோல் இரு தினங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இன்று அதிகாலையில் கேரள மாநிலம் முழுவதும் 56 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது. மத்திய அரசின் தடையை மீறி இந்த அமைப்பு ரகசியமாக தனது செயல்பாடுகளை தொடர்ந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.