தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் தன்னை அவதூறாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ரோஜா, செய்தியாளர் சந்திப்பின்போது கண் கலங்கினார்.
நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா கண்கலங்கியது ஏன்? ஆந்திர பிரதேசத்தில் கடந்த 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாநில குற்றப் புலனாய்வு துறையினர் கடந்த 10ஆம் தேதி சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர். அவரது கைதை ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் இணைந்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினார். இது தெலுங்கு தேசம் கட்சியினரை ஆத்திரமடைய செய்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி, ரோஜாவை ஆபாச பட நடிகை என இழிவாக விமர்சித்தார்.
இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மகளிர் ஆணையம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரோஜா, தெலுங்குதேசம் கட்சியினர் பெண்களை விளையாட்டு பொருட்களாக பார்ப்பதாகவும், உங்கள் வீட்டு பெண்கள் குறித்து இவ்வாறு தரம் தாழ்த்தி பேசினால், நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.
அப்போது உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் ரோஜா கண் கலங்கினார். தன்னை பற்றி தரம் தாழ்த்தி பேசிய சத்யநாராயண மூர்த்தியை அவரது மனைவி கண்டித்திருக்கவேண்டும் என ஆவேசத்துடன் கூறினார்.
நான் ஆபாச படத்தில் நடித்தவள் என்றால், என்னை ஏன் சந்திரபாபு நாயுடு கட்சியில் சேர்த்தார் என கேள்வி எழுப்பிய ரோஜா, உங்கள் கட்சியில் இருந்தபோது நல்லவளாக தெரிந்த நான், வேறு கட்சிக்கு சென்றவுடன் எப்படி கெட்டவளாக மாற முடியும் என கேள்வி எழுப்பினார்
தனது அரசியல் வளர்ச்சியை கண்டு அஞ்சும் தெலுங்கு தேசம் கட்சி இவ்வாறு செயல்படுவதாகவும், பண்டாரு சத்ய நாராயண மூர்த்தி மீது மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.