செய்திகள்

காரை நிறுத்தி நலம் விசாரித்த முதலமைச்சர்; நெகிழ்ச்சியில் சி.ஆர்.சரஸ்வதி!

கல்கி டெஸ்க்

சென்னை அசோக் நகரில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த முதலமைச்சருக்கு அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி வணக்கம் தெரிவித்தார்.

சி.ஆர்.சரஸ்வதியை தனக்கு வணக்கம் தெரிவிப்பதைக் கண்ட முதலமைச்சர், உடனே காரை நிறுத்தச் சொல்லி, காரிலிருந்து கீழே இறங்கி சாலையில் அந்தப் பக்கம் நின்றுகொண்டிருந்த சி.ஆர்.சரஸ்வதியின் அருகில் வந்து வணக்கம் தெரிவித்ததோடு, அவரிடம் நலம் விசாரித்துச் சென்றார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத சி.ஆர்.சரஸ்வதி மிகவும் மன நெகிழ்ச்சியில் ஆழ்ந்துவிட்டார்.

முதலமைச்சர் அங்கிருந்து சென்றவுடன் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதி, “வெளியில் சென்றுவிட்டு, இதே பகுதியில் இருக்கும் எனது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது நிறைய பேர் இங்கு குழுமி இருப்பதைக் கண்டு என்னவென்று விசாரித்தபோது, மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் வந்திருப்பதாகத் தெரிவித்தார்கள். என்னதான் நாங்கள் அரசியலில் எதிரெதிர் கட்சியாக இருந்தாலும் எல்லோருக்கும் முதலமைச்சர் அவர்தானே. அந்த ஒரு நிலையில் அவருக்கு வணக்கம் தெரிவிப்பதற்காகவும், நாங்கள் வசிக்கும் பகுதியில் தேங்கும் மழை நீர் குறித்து முதலமைச்சர் தெரிவிப்பதற்காகவும் அங்கு நின்றிருந்தேன்.

முதலமைச்சர் அங்கே வந்தபோது அவருக்கு நான் வணக்கம் தெரிவித்தேன். உடனே அவர் காரை நிறுத்தச் சொல்லி, காரிலிருந்து இறங்கி வந்து என்னிடம் பேசுவார் என்று நான் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவே இல்லை. அப்போது அவர் என்னிடம் நலம் விசாரித்தது அவரது அரசியல் நாகரிகத்தைக் காட்டியது. அதையடுத்து, முதலமைச்சரிடம் எங்கள் பகுதியில் மழை நீர் தேங்குவது குறித்து தெரிவித்தேன். அதற்கு அவர், ‘அதற்காகத்தான் நானே நேரில் வந்திருக்கிறேன். விரைவில் சரிசெய்து விடலாம்’ என்று கூறிவிட்டு சென்றார்.

ஒரு முதல்வரே இறங்கி வந்து பொதுநலப் பணிகளைப் பார்வையிடுவதும், பொதுமக்களிடம் பேசுவதும் ஆரோக்கியமான அரசியலாகவே நான் பார்க்கிறேன். மக்களின் பிரச்னைகளை காது கொடுத்துக் கேட்கும் நமது முதல்வருக்கு மிகவும் நன்றி” என்று அவர் அப்போது மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Biggboss 8: பெண்கள் இடுப்பில் கைவைத்து நிற்க வேண்டும்… இதலாம் ஒரு டாஸ்க்கா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

பிரண்டைத் துவையல் பெருகும் பலன்கள்!

பாகிஸ்தானின் மறைமுக எச்சரிக்கை... சாம்பியன்ஸ் ட்ராபி இந்தியாவில் நடைபெறவுள்ளதா?

அடுத்த ஆண்டிலிருந்து ஸ்மார்ட் போன்கள் விலை உயரும் என ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிவிப்பு!

விமர்சனம்: கங்குவா - படக்குழுவின் பேட்டிகளும் இப்போது படமுமே 'மீம் மெட்டீரியல்'கள் ஆகிப் போச்சே!

SCROLL FOR NEXT