மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற குஷ்வாஹா சமாஜின் மாநாட்டின்போது ஒருவர் தடுப்புகளைத் தாண்டி வந்து தனது ஒரு வயது குழந்தையை முதல்வர் முன் விசினார். பேசிக்கொண்டிருந்த முதல்வர் சவுகான் உடனடியாக குழந்தையை நோக்கி ஓடிவந்தார்.
உடனடியாக அங்கிருந்த காவலர் ஒருவர் குழந்தையை தூக்கி தாயிடம் ஒப்படைத்தார். அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. குழந்தையை முதல்வர் முன் கொண்டு வந்தவர் பெயர் ஷாஜாபூர் மாவட்டத்தில் வசிக்கும் முகேஷ் படேல் என்று விசாரணையில் தெரியவந்தது. அவரது குழந்தை நரேஷுக்கு இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பதாகவும் அதற்கு சிகிச்சைக்கு அளிக்க முதல்வரிடம் உதவி கோரி வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதுபற்றி அறிந்த முதல்வர், குழந்தையின் உடல்நிலை குறித்து தேவையான அனைத்து தகவல்களையும் சேகரித்து, குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி, சாகர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஆர்யாவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
முகேஷ் படேல் தனது வயதான தாய், மனைவி, ஐந்து வயது மூத்த மகன் மற்றும் நோய்வாய்ப்பட்ட ஒரு வயது குழந்தை நரேஷ் உடன் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியான இவர் பல்வேறு மருத்துவமனைகளில் நரேஷுக்கு ஆரம்ப சிகிச்சை அளித்திருக்கிறார். ஆனால், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் சிறப்பு சிகிச்சை பெற வசதி இல்லை என்றும் மருத்துவர்கள் குழந்தையை மும்பைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
மும்பையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முதற் கட்டமாக ரூ.3.50 லட்சம் தேவைப்படுவதால் என்ன செய்வது என்று தெரியாமல், ஞாயிற்றுக்கிழமை சாகரில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடப்பதை அறிந்து படேலும் அவரது மனைவியும் எப்படியாவது தங்கள் மகனின் சிகிச்சைக்கு ஆதரவைப் கோரி முறையிட வந்துள்ளனர்.
ஆனால் அவர்கள் முதல்வரை சந்திக்க முடியாமல் காவல்துறையினர் தடுத்துள்ளனர். காவல் துறையினருடன் இரண்டு மணிநேரமாகப் போராடிய பின்பும் அனுமதி கிடைக்காததால், மகேஷ் படேல் தனது மகனை மேடை முன்பு வீசிவிட்டார் என போலீசார் தெரியவித்தனர். அதற்குப் பின்னர் அவர் தன செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.