சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காக 13 வயது சிறுமி செய்த காரியம் அவரது உயிரைப் பறித்துள்ளது.
இப்போதெல்லாம் சோசியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கின்றனர் இணையவாசிகள். இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் கிறுக்குத்தனமாக எதையாவது செய்வது, ஆபத்தான விஷயங்களை விளையாட்டாக முயற்சிப்பது போன்றவற்றை அதிகமானோர் செய்து வருகின்றனர்.
இதுபோன்ற செயல்களை அதை செய்பவர்களே விரும்புவதில்லை என்றாலும், பார்வையாளர் களுக்காகவும், லைக்குகளுக்காகவும், அதனால் அவர்களுக்குக் கிடைக்கும் பணம் மற்றும் பிரபலத் தன்மைக்காக, அவ்வாறு செய்கின்றனர். இதுபோல் கிறுக்குத்தனமாக எதுவும் செய்யாதீர்கள் என அவர்களைப் பார்த்து சொல்பவர்களை, பூமர் அங்கிள் என சொல்லி கிண்டல் செய்கின்றனர். இதனால் அவர்களை எச்சரிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
வித்தியாசமாக முயற்சிக்கிறேன் என்ற பெயரில், சிலர் எதையாவது செய்து அவர்களின் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் சோசியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக 13 வயது சிறுமி செய்த செயல், அவரின் உயிரையே காவு வாங்கிவிட்டது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர் நகரத்தில் வசித்து வரும் எஸ்ரா ஹெய்ன்ஸ் என்ற 13 வயது சிறுமி சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த மார்ச் 31ஆம் தேதி இவரது நண்பர்கள் ஏற்பாடு செய்த பார்ட்டிக்கு சென்றிருந்தார். அந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவில் 'குரோமிங்' என்ற சேலஞ்ச் சோசியல் மீடியாவில் பிரபலமாக இருந்தது. அதாவது நாம் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை மூக்கில் நன்றாக அடித்து, அதை சமூக வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும். இதுதான் குரோமிங் சேலஞ்ச் எனப்படுகிறது. இந்த சேலஞ்சை அன்றிரவு எஸ்ரா ஹெய்ன்ஸ் செய்துள்ளார்.
அப்போது அவர் வாசனை திரவியத்தை நேரடியாக முகர்ந்த சில நொடியிலேயே, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து அவருடைய நண்பர்கள் அந்தச் சிறுமியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. சரியாக மூச்சு விட முடியாத நிலையில், இதயம் மெல்ல மெல்ல செயல்பாட்டை இழந்ததால், அவருக்கு லைஃப் சப்போர்ட் எனப்படும் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.
இப்படியாக இச்சிறுமி இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் நேற்று இரவு உயிரிழந்தார். இச்சிறுமியின் உயிரிழப்பு ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களிடையே பரவி வரும் அதிகப்படியான சோசியல் மீடியா மோகம் குறித்து அங்குள்ள பெற்றோர்கள் மிகுந்த கவலையில் இருந்து வருகின்றனர்.
"வாசனை திரவியம் மற்றும் டியோடிரண்டில் ரசாயனங்கள் அதிகம் இருப்பதால், அதை நேரடியாக சுவாசிக்கக்கூடாது. இனி இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களில் குழந்தைகள் ஈடுபடாமல் இருக்க பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்" என இறந்து போன சிறுமியின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.