செய்திகள்

திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணிவைக்க மேற்குவங்க காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு!

ஜெ.ராகவன்

2024 மக்களவை தேர்தலின் போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க மாநில திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடாது என அம்மாநில தேசிய காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் கூட்டணி பாட்னாவில் வருக்கிற 12 ஆம் தேதி கூடி மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்கான உத்திகள் குறித்து ஆலோசிக்க உள்ள நிலையில், அவர்கள் திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வரும் மக்களவைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஐக்கிய ஜனதாதளத் தலைவரும் பிகார் முதல்வருமான நிதிஷ்குமார் பெருமுயற்சி எடுத்து வருகிறார்.

இதையடுத்து மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்கான உத்திகளை வகுக்கும் நோக்கில் பாட்னாவில் வருகிற 12 ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்கிடையே மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் ஒரே எம்.எவ்.ஏ.வான பைரோன் விஸ்வாஸ் என்பவரை தனது கட்சிக்குள் இழுத்துள்ளது. அவரிடம் பேரம் பேசி திரிணமூல் விலைக்கு வாங்கிவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பிரதீப் பட்டாச்சார்யா (மாநிலங்களை எம்.பி.), முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மன்னன், மேற்கு வங்க மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் அஸார் மாலிக் உள்ளிட்டோர் தில்லியில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினர்.

மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ், திரிணமூல் கட்சியுடன் எந்த கூட்டணியும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு கார்கே, மாநில தலைவர்களை கலந்து ஆலோசிக்காமல் கூட்டணி பற்றி எந்த முடிவும் எடுக்கப்படாது என்று உறுதியளித்தாக கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் திரிணமூல் காங்கிரஸிடம் விலைபோயுள்ளார். எனவே மாநிலத்தில் அக்கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கார்கேயிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

சாகர்திகி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஸ்வாஸ், இடது முன்னணி ஆதரவில் வெற்றிபெற்றார். அவரது வெற்றி திரிணமூல் காங்கிரஸுக்கு பலத்த அடியாகும். இந்த நிலையில் விஸ்வாஸ் திரிணமூல் காங்கிரஸுக்கு சென்றுவிட்டதன் மூலம் எங்களது முயற்சி வீணாகிவிட்டது என்று இடது முன்னணி தலைவர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் 12 ஆம் தேதி திட்டமிட்டபடி நடந்தாலும் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து போராடுவதை நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம் என்று மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளதுரி தெரிவித்துள்ளார். மாநிலத்தில் மம்தா பானர்ஜி கட்சியுடன் கூட்டணி கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

SCROLL FOR NEXT