ஒரு ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவுக்கு பெரிய எரிக்கல் இன்னும் 23 ஆண்டுகளில் பூமியை மோத வாய்ப்புள்ளது என நாசா தெரிவித்துள்ளது. இது சரியாக 2046 ஆம் ஆண்டு, பிப்ரவரி 14 காதலர் தினத்தில் நடக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
பூமியை இந்த எரிக்கல் தாக்குவதற்கு 625 இல் ஒரு சதவீதம் வாய்ப்பு இருப்பதாக, ஐரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி தரப்பிலும், நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகம் தரப்பில், 560 இல் ஒரு சதவீதம் வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 2023 DW என பெயரிடப்பட்ட இந்த எரிக்கல், டொரினோ தாக்க அபாய அளவுகோலின் படி, பத்தில் ஒரு சதவீதம் பூமியை தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதர மற்ற அளவுகோல்கள் அனைத்தும் பூமியை தாக்கும் வாய்ப்பு 0% சதவீதம் என்று காட்டுகிறது. என்னதான் மோதல் வாய்ப்புகளில் 2023 DW முதலிடத்தில் இருந்தாலும், பெரும்பாலான அளவீடுகளில் பூஜ்ஜிய சதவீதமே காட்டுவதால், இந்த எரிகல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றே வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இது பற்றிய கூடுதல் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, மேலும் பல பகுப்பாய்வுகள் செய்து, தாக்கத்தின் தன்மை மாற்றப்படலாம் என்று நாசா அதிகாரிகள் எச்சரித்து ள்ளார்கள். இதுபோன்ற புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கும் போது, எதிர்காலத்தில் அவற்றின் சுற்றுப்பாதை போதுமான அளவு கணிக்கத் தேவைப்படும் தரவுகளை சேகரிக்க, பல வாரங்கள் தேவைப்படுகிறது என Nasa Asteroid Watch என்ற ட்விட்டர் தளத்தில், நாசா பதிவிட்டிருந்தது.
தற்போது கிடைத்திருக்கும் தரவுகள் படி, இந்த எரிக்கல்லின் அளவு 160 அடி விட்டம் கொண்டதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது பூமியை நெருங்கும் போது, அது சார்ந்த தகவல்களைத் துல்லியமாகக் கணிக்கலாம். ஒருவேளை இது பூமியைத் தாக்காமல், பூமிக்கு மிகவும் அருகே கடந்து செல்லும் நிகழ்வு, பிப்ரவரி 14, 2046 ஆம் ஆண்டு நிகழலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 கணிப்புகள், இந்த நிகழ்வு 2047 முதல் 2054க்குள் நடக்கும் என சொல்கிறது. இது பூமியை கடந்து செல்லும் போது, 1.8 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் என NASA's Eye On Asteroids இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
நொடிக்கு 15.5 மைல் வேகத்தில் பயணிக்கும் இந்த எரிக்கல், தற்போது பூமியிலிருந்து 18 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இது சூரியனை ஒரு முறை சுற்றிவர, 271 நாட்களை எடுத்துக் கொள்ளுமாம்.
எப்பொழுதுமே புதியதாகக் கண்டுபிடிக்கப்படும் எரிக்கற்கள் தொடக்கத்தில் ஆபத்து நிறைந்ததாகக் காணப்படும். ஏனென்றால் இவ்வாறு கணிக்கப்படும் சுற்றுவட்டப் பாதையின் நிலைப்புத்தன்மை நிச்சய மற்றதாக இருப்பதால், எதிர்காலத்தில் இது எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், எதிர்காலத்தில் இதைப் பற்றி சேகரிக்கப் படும் பல தரவுகளை இணைத்துப் பார்த்தால், இதன் சுற்றுவட்ட பாதையின் நிலைப்புத்தன்மை மிகவே குறைந்ததாக இருக்கும். எனவே தற்போது கூறிய ஆரம்ப அவதானிப்புகள் பெரும்பாலும் நிராகரிக்கப்படலாம். இந்த நிகழ்வு ஏற்பட இன்னும் 23 ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டும். அதுவரையில் பூமியில் மகிழ்ச்சியாக இருப்போம்.