சமீபத்தில் நடந்த ஆப்பிள் வருடாந்திர உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் அந்நிறுவனம் தனது முதல் மிக்சட் ரியாலிட்டி (MR) ஹெட்செட்டான Vision Pro-வை அறிமுகம் செய்தது.
இந்த புதிய ஹெட்செட், ஐசைட் உடன் கூடிய அதிக தெளிவுத்திறன் கொண்ட டிஸ்ப்ளேக்களைக் கொண்டுள்ளது. இதை பயன்படுத்துபவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றி விழிப்புடன் இருக்கலாம். பல சென்சார்கள் மற்றும் கேமராக்களுடன் இயங்கும் இந்த டிவைஸில், கண் மற்றும் குரல் கட்டுப்பாடு அமைப்பும் இருக்கிறது. இதில் அக்குமெண்டட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளது. எனவே இதை மிக்ஸடு ரியாலிட்டி ஹெட்செட் எனக் கூறுகின்றனர்.
இந்த ஆப்பிள் விஷன் ப்ரோவில் இருக்கும் இரண்டு சேனல்களிலும் 23 மில்லியன் பிக்சல் கொண்ட டூயல் கேமரா அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு தனிப்பயன் 3டி லென்ஸும் பொருத்தப்பட்டுள்ளது. எனவே இதை அணிபவர்கள், நேரடியாகப் பார்ப்பது போலவே அக்குமெண்டட் ரியாலிட்டி கன்டென்ட்களைப் பார்க்க முடியும். ஸ்டார் ஸ்கேனர் மற்றும் ட்ரூ டெப்த் கேமராக்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்த டிவைஸின் சுற்றுப்புறத்தை கண்காணிக்கவும் புரிந்துகொள்ளவும் முடியும்.
சக்தி வாய்ந்த M2 சிப் மற்றும் M2 சிப்-ஐ அடிப்படையாகக் கொண்ட R1 எனப்படும் புதிய சிப் மூலம் இது இயங்குகிறது. இந்த சாதனம் மொத்தமாக 5 சென்சார்கள், 6 மைக்ரோபோன்கள் மற்றும் 12 கேமராக்களை ஆதரிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரை இந்த சாதனத்தில் பயனர்களின் கருவிழியை ஸ்கேன் செய்யக்கூடிய ஆப்டிக் ஐடி ஸ்கேன் அம்சத்துடன் வருகிறது. எனவே இதை பயன்படுத்துபவரைத் தவிர வேறு எவரும் அவ்வளவு எளிதில் இதைப் பயன்படுத்த முடியாது. இந்த ஹெட்செட், Vision OS என்ற புதிய வகை இயங்குதளத்தின் கீழ் இயங்குகிறது.
இந்த ஆப்பிள் விஷன் ப்ரோவின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 2 லட்சத்து 88 ஆயிரம் என சொல்லப்படுகிறது. இந்த சாதனம் அடுத்த ஆண்டு தொடங்கத்தில் நேரடியாக ஆப்பிள் டாட் காம் இணையதளம் வாயிலாகவும், அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் ரீடைல் கடைகள் வாயிலாகவும் விற்பனைக்கு வரும். இந்தியா மற்றும் பிற நாடுகளில் இந்த ஹெட்செட் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல்கள் நிறுவனம் தரப்பிலிருந்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும் இந்த சாதனம் அமெரிக்காவில் வெளியான ஒரு சில மாதங்களில் இந்தியா உட்பட மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.