'Mudiorasanas'! 
ஸ்பெஷல்

August 21 - World Senior Citizen's Day 'முதியோராசனங்கள்' - இளமை திரும்புமே!

கல்கி டெஸ்க்

ஆகஸ்ட் 21 - உலக மூத்த குடிமக்கள் தினம்

இடுப்பு வலி, முதுகு வலி, கால் வலி என்று உடல் ரீதியாக முதியோர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பல. ஐம்பது, அறுபது வயதுக்குப் பிறகு பி.பி., சர்க்கரை என்று நோய்கள் வரிசைகட்டி நிற்கும். சற்று நேரம் நடந்தாலே மூச்சிரைக்கும். முதியோர்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு யோகாசனத்தின் மூலம் தீர்வு காணலாம் என்கிறார்கள் கிருஷ்ணமாச்சார்யா யோக மந்திரத்தின் யோகா ஆசிரியர்கள் சீனிவாசனும், ஜானகிராமனும்.

வயதானவர்களுக்கு உபயோகமான சில யோகாசனங்களை அவர்களே செய்து காண்பித்தனர் :

  • அமர்ந்த நிலையில் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். இரு கை மணிக்கட்டுகளையும் மடக்கிக் கொள்ளவும் (படம் A1). மூச்சை உள்ளிழுத்தபடியே, கைகளை தலைக்கு மேலாகத் தூக்கவும் (படம் A2). பின்னர் மூச்சை வெளியே விட்டபடியே கைகளைக் கீழே இறக்கவும். ஐந்தாறு முறை இதே பயிற்சியை செய்யவும்.

பலன்கள்: கைகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராகும்.

  • அடுத்து, நின்ற நிலையில் ஒரு பயிற்சியைப் பார்க்கலாம். இரண்டு கால்களையும் சற்றே அகட்டி வைத்து நிற்கவும். சுவரில் இரண்டு கைகளையும் ஊன்றியபடியே, இடது காலை மட்டும் முன்னால் நீட்டவும் (படம் B1). மூச்சை உள்ளே இழுத்தபடியே இடது கால் முட்டியை முன்பக்கமாக மடக்கவும் (படம் B2). பின்னர் மூச்சை வெளியேற்றியபடியே நேராக நிற்கவும். இப்பயிற்சியை இடது பக்கம் ஐந்தாறு முறையும், பின்னர் வலது பக்கம் ஐந்தாறு முறையும் செய்யவும்.

பலன்கள்: முதுகு வலிக்கு ஏற்ற பயிற்சி இது. நடக்கும்போது தடுமாறாமல் பேலன்ஸ் செய்ய இந்தப் பயிற்சி உதவுகிறது.

  • மூன்றாவதாக மற்றொரு பயிற்சியைப் பார்க்கலாம். இரண்டு கால்களையும் விலக்கி வைத்து நிற்கவும். கைகளை சுவரில் ஊன்றிக் கொள்ளுங்கள் (படம் C1). இப்போது, மூச்சை உள்ளிழுத்தபடியே இடுப்பை முன்பக்கமாக லேசாக வளைக்கவும். அப்போது தலையைத் தூக்கி மேலே பார்க்கவும் (படம் C2). கண்கள் திறந்த நிலையில் இருக்கட்டும். பின்னர் மூச்சை வெளியேற்றியபடியே இடுப்பை சாதாரண நிலைக்குக் கொண்டு வரவும். ஐந்தாறு முறை இப்பயிற்சியை செய்யவும்.

பலன்கள்: இடுப்பு, கழுத்துப் பகுதி பலப்படும். நல்ல பேலன்ஸ் கிடைக்கும்.

  • கால்களை நீட்டிப் படுக்கவும். கைகள் உடலோடு ஒட்டியபடி பக்கவாட்டில் இருக்கட்டும். கால்களை மடக்கி, உடலோடு சேர்த்து வைக்கவும். முடியாதவர்கள் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு கால்களை சேர்த்து வைத்தால் போதும் (படம் D1).இப்போது, மூச்சை உள்ளே இழுத்த படியே இடுப்பை மெதுவாகத் தூக்கவும் (படம் D2). பின்னர் மூச்சை வெளியேற்றியபடியே இடுப்பை கீழே இறக்கவும். கண்கள் மூடியிருக்கட்டும். ஐந்தாறு முறை இப்பயிற்சியை செய்யவும்.

பலன்கள்: இடுப்புப் பகுதி வலுப்பெறும். கழுத்து, தோள்கள் உறுதியாகும்.

'Mudiorasanas'!

மேற்கூறிய ஆசனம் செய்தவுடன், அதற்கான மாற்று ஆசனத்தையும் செய்யவேண்டும்.

  • முதலில் கால்களை நீட்டிப் படுக்கவும். கைகள் உடலோடு ஒட்டி இருக்கட்டும். கால்களை மடக்கி உடலோடு சேர்த்து வைக்கவும். கைகளால் முட்டியை பிடித்துக் கொள்ளுங்கள். இப்போது மூச்சை வெளியேற்றியபடியே முட்டியை மார்பை நோக்கி கொண்டு வரவும் (படம் E1). மூச்சை உள்ளிழுத்த படியே முட்டியை மார்பிலிருந்து விலக்கவும் (படம் E2). இதற்கு அபானாசனம் என்று பெயர்.

பலன்கள்: அடிவயிற்றுப் பகுதிக்கு நல்ல பலம் கிடைக்கும். மலச்சிக்கல், அஜீரணக்கோளாறுகள் நீங்கும்.

(அக்டோபர் 1 - 15, 2015 தேதியிட்ட மங்கையர் மலர் இதழிலிருந்து ...)

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

கடின உழைப்பே தன்னிறைவான வாழ்க்கைக்கு வழி!

70 வயதுக்குப் பிறகும் அறிவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

SCROLL FOR NEXT