முன்பெல்லாம் காதலை தெரிவிக்க மரத்திலே பெயர்களை செதுக்குவதுண்டு. அது காலத்திற்கும் அழியாமல் இருக்கும் என்று அவ்வாறு செய்தனர். ஆனால். இப்போதெல்லாம் காதலர்கள் தங்கள் காதலை பூட்டை வைத்து, பூட்டி வைத்துக் கொள்கிறார்கள். வினோதமாக இருந்தாலும் இதுவே உண்மையாகும்.
‘காதலை மனதிலே பூட்டி வைக்கக் கூடாது’ என்று சொல்வார்கள். அதனால்தானோ என்னமோ தங்களின் காதலை பூட்டிலே பூட்டி வைத்துக்கொள்கிறார்கள் போலும்.
தற்போதுள்ள காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த பல வழிமுறைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் காதலை பூட்டி வைக்க பூட்டை பயன்படுத்துவது ஆகும். அந்தக் காதல் பூட்டை பாலம், வேலி, கதவுகள், நினைவு சின்னம் போன்ற இடங்களில் பூட்டி வைத்து தங்கள் காதலை உலகிற்கு வெளிப்படுத்துகிறார்கள்.
காதலர்கள் தங்களுடைய பெயர், தேதி போன்றவற்றை அந்த பூட்டிலே எழுதி பூட்டி வைத்துவிட்டு அதன் சாவியை ஆற்றிலே எறிந்து விடுவது வழக்கமாகும். இதனால் அவர்களின் காதல் காலத்திற்கும் உடையாமல் இருக்கும் என்று நம்புகிறார்கள். 2000 ஆண்டிலிருந்து இதன் மவுசு அதிகரித்தாலும், சில காதலர்கள் தங்களின் இந்தப் பழக்கம் மக்களுக்குத் தொல்லை தரும் விஷயமாகக் கருதுகிறார்கள். எனினும், சிலர் இதைப் பயன்படுத்தி அவ்விடத்தை சுற்றுலாத்தலமாக மாற்றி ஆதாயம் காண்கிறார்கள். உலகில் இதுபோன்ற இடங்கள் பல உருவாகியுள்ளன. அங்கேயெல்லாம் காதலர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜெர்மனியில் உள்ள பூட்டு தயாரிக்கும் நிறுவனம் துருப்பிடிக்காத, அலுமினியத்தால் ஆன காதல் பூட்டை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘பான்ட் டெஸ் ஆர்ட்ஸ்’ என்னும் பாரிஸில் உள்ள பாலத்தில்தான் 2008ம் ஆண்டு சுற்றுலா பயணிகள் பூட்டை மாட்டத் தொடங்கினார்கள். அந்தப் பாலத்தின் கீழே ஓடும் செயன் ஆற்றில் பூட்டினுடைய சாவியை ஏறிந்து விடுவார்கள். இது பாரிஸில் உள்ள மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகும் மற்றும் புகைப்படக் கலைஞர்களின் விருப்பமான இடமாகும்.
‘காதல் பூட்டை’ மாட்டுவதற்குக் காரணம், தன்னுடைய காதலையும் அர்ப்பணிப்பையும் உணர்த்துவதற்காக என்று கூறப்படுகிறது. இது தங்கள் காதலின் இணைப்பை வெளிப்படுத்துகிறது என்றும் நம்புகிறார்கள்.
இந்தியாவிலும் காதலை உணர்த்த பூட்டு போடப்படும் இடம் ஒன்று உள்ளது தெரியுமா? உதய்ப்பூரில் உள்ள சந்த்போல் பாலம்தான் அது. இங்கேயும் காதலர்கள் தங்கள் பெயரை பூட்டிலே எழுதிவிட்டு சாவியை முத்தமிட்டு பிக்கலோ ஏரியில் வீசுவதைக் காணலாம்.
‘காதலுக்கு கண் இல்லை’ என்று சொல்வதுண்டு. காதலுக்கும் பூட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் ஒரு சின்ன கிறுக்குத்தனம் இருப்பதுதானே காதலுக்கு அழகு. எல்லோரும் காதலுக்காக தாஜ்மஹால் கட்ட முடியாதல்லவா? எந்த லாஜிக்கும் பார்க்காமல் பூட்டை போட்டு விட்டு தங்களுக்கென்று ஒரு காதல் சின்னத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள் இன்றைய தலைமுறை காதலர்கள்.