திமுக அரசு தன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல அம்புலி மாமா ஆட்சி செய்கிறது என்று விமரிசித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது:
திமுக அரசு தன் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் அம்புலி மாமா கதை போல ஆட்சி நடத்துகிறது. திமுக தன் தேர்தல் அறிக்கையில், தன் கட்சி ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களுக்குள் கும்பகோணத்தை தனி மாவட்டமாக்குவேன் என அறிவித்தார்கள்.
அப்படி பொறுப்பேற்று ஒரு ஆண்டுகளாகியும் இன்னும் அறிவிக்கவில்லை.இப்படி திமுக–வின் 517 பக்க தேர்தல் அறிக்கை அம்புலிமாமா கதை போல் கற்பனையாகவே உள்ளது. அந்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப் பட்டுள்ளது என்பது குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
வருகிற 2024-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 400 எம்பிகளுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் குடும்ப அரசியல் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக செத்த பாம்பை அடிப்பதுபோல், காவிரியை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். இது தான் தேசிய மாடலுக்கும், திராவிட மாடலுக்கும் உள்ள வித்தியாசம்.
-இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.