காலம் மாற மாற சைவமானாலும், அசைவமானாலும் உணவு வகைகள் விதவிதமாக பெருகிக்கொண்டே வருங்கின்றன. ஆனால், அனைத்து வகை உணவுகளிலுமே பொதுவாக எண்ணெய் சேர்த்துக்கொள்ளாமல் உணவு சமைப்பது என்பது கடினமான ஒன்றாகவே இருக்கிறது. சிலர், அதாவது டயட்டில் இருப்பவர்கள் எண்ணெய் இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்வர். சிலருக்கு எண்ணெய் சேர்த்தால் மட்டுமே உணவு சாப்பிட்ட மாதிரி இருக்கும். ஆனால், கூடவே குண்டாகிவிடுவோமோ, தொப்பை விழுந்துவிடுமோ, அல்லது செரிக்காமல் போய்விடுமோ என்ற பயமும் வந்துவிடும். இந்த பயம் நியாயமானதுதான்.
எண்ணெய் உணவு அதிகம் எடுத்துக்கொண்ட பிறகு இதுபோன்ற பிரச்னைகள் வராமல் இருக்க, கீழ்கண்ட சில ஆலோசனைகளைப் பின்பற்றினால் இந்த பயத்தைத் தவிர்க்கலாம்.
1. உணவுக்குப் பின் மிதமான சூட்டில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவும். இது வயிற்றில் உள்ள கொழுப்பு உணவுகளை உடைத்து செரிமான தன்மையை அதிகரிக்கும். மேலும் வறட்டுத் தன்மையைப் போக்கி, எண்ணெய் உணவுகளால் ஏற்படும் மலச்சிக்கலைத் தடுக்கும். நீரில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், எண்ணெய் பொருட்களிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடல் குண்டாவதைத் தடுக்கும்.
2. சுடு தண்ணீர் அல்லது க்ரீன் டீ சாப்பிட்ட பிறகு எடுத்துக்கொள்வது நல்லது. இது அந்த உணவுகளில் இருக்கும் அதிக நச்சுத் தன்மையை குறைத்து, உடல் நலத்தைப் பாதுகாக்கும்.
3. நிறைய எண்ணெய் சேர்த்த உணவு எடுத்துக்கொண்ட பின்னர் குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கவும். அதாவது, ப்ரிட்ஜில் வைத்த ஐஸ் கிரீம், குளிர் பானங்கள் போன்றவற்றைக் குடிப்பதால் குடல், வயிற்றில் அழுத்தம் உருவாகி செரிமானத் தன்மை குறையும். சாதாரண உணவு சாப்பிட்டாலே சிலருக்கு செரிமானம் ஆவது கடினம். அதிலும் எண்ணெய் கலந்த உணவு எடுத்துக்கொண்டால் செரிமானமாவது மிகவும் கடினமாகும்.
4. அந்த நாளின் அடுத்த வேளை உணவை சப்பாத்தி, தோசை, இட்லி போன்ற மிகவும் லைட்டான உணவாக எடுத்துக்கொள்வது செரிமானத்துக்கு ஓய்வு தரும்.
5. எண்ணெய் உணவுகளை எடுத்துக்கொண்ட பிறகு உடனடியாக தூங்காமல் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்தால் அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
6. அதேபோல், அடுத்த நாள் உணவில் சீக்கிரம் ஜீரணமாகக் கூடிய உணவுகள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக்கொண்டால் உடலுக்கு தெம்பாக இருக்கும்.
உண்மையைச் சொல்லப்போனால் வயதானவர்களை விட இன்றைய இளைஞர்கள்தான் எண்ணெய் அதிகம் கலந்த உணவுகளை சாப்பிடுவது அதிகமாக உள்ளது. ஆகையால், மேற்கண்ட உணவு முறைகளை அனைத்து வயதினருமே தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிவிட்டது.
‘செரிமான வழிகள்தான் தெரிந்துவிட்டதே! பிறகு என்ன கவலை?’ என்று நிறைய எண்ணெய் சேர்த்து நன்றாக சாப்பிட்டு அவதிப்பட வேண்டாம். அனைத்தையும் ஒரு கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வழிமுறைகளைப் பின்பற்றினால் உடலுக்கும் உயிருக்கும் நல்லது.