இனிப்பு சேருகிற அளவிற்கு கசப்பு நமது உணவில் சேர்வது இல்லை. ஆறு சுவைகள் என்று பேசும்போது இதனையும் சேர்த்துதான் பேசுகிறோம். ஆனாலும். இவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. கசப்பு சுவை கொண்ட பாகற்காயின் மருத்துவ குணங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பாகற்காயை விதைத்த அறுபது நாட்களில் இருந்து பலன் பெற்று விடலாம். பாகற்காயை உண்ணுகிறபோது அதன் கொட்டையோடு சேர்த்து உண்பது சிறந்தது. பெரிய பாகற்காயில் பாஸ்பரஸ் அதிகம். ஆனால், சிறிய பாகற்காயில்தான் விட்டமின் சி அதிகம்.
பொதுவாக சொல்லப்போனால், சிறிய பாகற்காய்தான் உடலுக்கு நன்மை பயப்பவை. பாகல் உடலுக்குக் குளிர்ச்சி தருகிறது. மலத்தை இளக்குகிறது. பசியைத் தூண்டுகிறது. வயிற்றுப் புண்ணை குணமாக்குகிறது. கல்லீரல், கண் நோய்க்கு எல்லாம் இதிலே மருந்து உண்டு. பக்கவாதத்தை கூட இது கண்டிக்கும்.
அதிகாலையில் பாகற்காய் சாறோடு வெந்தயத்தை கலந்து சாப்பிட்டால் நீரிழிவு கட்டுப்படும். காலையில் பாகல் சாற்றோடு எலுமிச்சம்பழம் அருந்தி வர, இரத்தம் சுத்தமாகும். சொறி, சிரங்கு நீங்கிப் போகும்.
அதிகாலையில் பாகல் சாற்றோடு தேன் கலந்து சாப்பிட்டு வர, சளி, காச நோய், இரத்த சோகை நீங்கும். குடற்புழுக்கள் அழியும். தீப்புண்கள், சிறு காயங்களின் மீது பாகல் சாறு தொற்றுநோக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. மூல நோயில் இரத்த ஒழுக்கு உள்ளவர்கள் பாகல் இலை சாற்றை மோரில் கலந்து குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
சித்த மருத்துவம் மேற்கொள்பவர்கள் பாகற்காயை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சாப்பிட வேண்டாம் என்றால் நிறுத்தி விடுவது நல்லது. ஏனெனில், இதன் கசப்புச் தன்மை மருந்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது.