கிரி கணபதி
பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமல்ல, அது மனித நாகரிகத்தின் ஒரு முக்கிய அடையாளம். பணம் பற்றிய நாம் அதிகம் அறியாத 10 சுவாரஸ்யமான உண்மைகளை இங்கே காண்போம்.
1. நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் காகிதத்தால் செய்யப்பட்டவை என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் அவை பருத்தி மற்றும் பால்சம் கலவையால் செய்யப்பட்டவை. அதனால்தான் அவை நீரில் நனைந்தாலும் காகிதம் போல எளிதில் கரைவதில்லை.
2. பணம் கைமாறிக்கொண்டே இருப்பதால், அது மிக அதிகமான பாக்டீரியாக்களைச் சுமந்து செல்கிறது. ஒரு சாதாரண ரூபாய் நோட்டில் ஆயிரக்கணக்கான கிருமிகள் இருக்கலாம்.
3. பழைய காலத்தில் நாணயங்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்டன. அப்போது சிலர் நாணயத்தின் ஓரத்தைச் சுரண்டி உலோகத்தைத் திருடுவதைத் தடுக்கவே, நாணயங்களின் விளிம்பில் கோடுகள் போடும் வழக்கம் வந்தது. இன்றும் அந்த டிசைன் தொடர்கிறது.
4. உலகிலேயே முதன்முதலில் காகிதப் பணத்தைப் பயன்படுத்திய நாடு சீனா. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் காகிதப் பணத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள்.
5. பண்டைய ரோமானிய காலத்தில், வீரர்களுக்குச் சம்பளமாக உப்பு வழங்கப்பட்டது. "Salary" என்ற ஆங்கில வார்த்தையே "Sal" என்ற லத்தீன் வார்த்தையிலிருந்துதான் வந்தது.
6. குறைந்த மதிப்புள்ள நோட்டுகள் மிக அதிகமாகப் புழங்குவதால், அவை சீக்கிரம் கிழிந்துவிடும். அதிக மதிப்புள்ள நோட்டுகள் குறைவாகவே கைமாறுவதால், அவற்றின் ஆயுட்காலம் அதிகம்.
7. Frank McNamara என்பவர் ஒருமுறை ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றபோது பர்ஸை மறந்து வைத்துவிட்டுச் சென்றார். அந்த தர்மசங்கடமான நிலைக்குப் பிறகுதான், பணம் கையில் இல்லாமலே பணம் செலுத்தும் "கிரெடிட் கார்டு" என்ற யோசனை அவருக்குத் தோன்றியது.
8. உலகில் உள்ள மொத்த பணத்தில் சுமார் 8% மட்டுமே கரன்சி நோட்டுகளாகவும், நாணயங்களாகவும் உள்ளன. மீதமுள்ள 92% பணம் கணினி எண்களாக வங்கிக் கணக்குகளில் மட்டுமே உள்ளது.
9. பிரபலமான விளையாட்டு "மோனோபோலி" (Monopoly). ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அச்சடிக்கும் உண்மையான பணத்தை விட, இந்த விளையாட்டுக்காக அச்சடிக்கப்படும் போலிப் பணத்தின் அளவு அதிகம்!
10. சில சமயங்களில், நாணயங்களை உருவாக்க ஆகும் செலவு, அந்த நாணயத்தின் மதிப்பை விட அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு, ஒரு ரூபாய் நாணயத்தைத் தயாரிக்க ஆகும் செலவு, அதன் மதிப்பை விடச் சற்று கூடுதலாக இருக்கலாம்.