தி.ரா.ரவி
மாதாந்திர பட்ஜெட் போட்டு, ஒரு குறிப்பிட்ட தொகையை மாத செலவுகளுக்கு ஒதுக்கி அதற்கு ஏற்றபடி செலவு செய்ய வேண்டும்.
வரிகளையும், கார், வீட்டு லோன்களையும் உரிய நேரத்தில் செலுத்துதல் முக்கியம்.
சொத்துக்களை உருவாக்குவதற்காக வாங்கப்பட்ட கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தினால் தான் சொத்தை பாதுகாக்க முடியும்.
பொருளாதார கொள்கைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 40 வயதுக்குள் ஒரு வீடு கட்டி முடிக்க வேண்டும், ஐம்பது வயதிற்குள் ஒரு கோடி பணம் சம்பாதிப்பேன் என்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவாறு உழைக்க வேண்டும்
உங்களுடைய வேலை பிடித்திருக்கிறதா? இன்னும் பத்து வருடங்களில் உங்களுடைய லட்சியத்தை அடைய முடிகிற அளவு வருமானத்தை அது தருகிறதா என்று பார்க்க வேண்டும்.
எதிர்பாராமல் வரும் திடீர், மற்றும் அவசரத் தேவைகளுக்கென்று பணத்தை சேமித்து வைக்க வேண்டும். மூன்றிலிருந்து ஆறு மாத வருமானம் கையிருப்பில் தயாராக இருக்க வேண்டும்.
பின்னாளில் உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைத்தால் அதற்கான தொகையை சிறிது சிறிதாக மாதந்தோறும் சேர்த்து வைக்க வேண்டும். கடன் வாங்கி சுற்றுலா செல்லக்கூடாது.
ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு நிறைய முதலீடுகள் செய்ய வேண்டும். இளமையிலேயே சேமிக்க ஆரம்பித்தால் தான் முதுமைக் காலத்தை மிக இனிமையாக அனுபவிக்கலாம்.
புத்திசாலித்தனமாக யோசித்து பணத்தை சேமிக்கலாம். உதாரணத்திர்கு, ஜிம்மில் மாதாமாதம் ஒரு பெரிய தொகையை கட்டி உடற்பயிற்சி செய்யாமல், வீட்டிலேயே செய்து, அந்த பணத்தை சேமிக்கலாம்.
உங்களுடைய வருமானத்திற்கு உட்பட்டு செலவு செய்யுங்கள். பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் பைக் லோன் போட்டு வாங்குவது தேவை இல்லை.
உங்களுடைய ஆரோக்கியத்திற்கு தேவையான ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சர்ஜரி என்றால் இன்சூரன்ஸ் கை கொடுக்கும்.
நல்ல நிதி ஆலோசகரை கலந்தாலோசித்து எப்படி எல்லாம் பணம் சேமிக்கலாம், எவற்றில் முதலீடு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான கல்லூரிக் கட்டணத்தை அவர்கள் எல்.கே.ஜி படிக்கும் போதில் இருந்து சேமிக்கத் தொடங்குங்கள். அவர்கள் கல்லூரி படிப்பின் போது லோன் போட்டு படிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
தாராளமாக உங்களுக்கான செலவுகளை செய்து, மற்றவர்களுக்கும் உங்களால் பண உதவி செய்ய முடிந்தால் நீங்கள் பொருளாதார சுதந்திரம் அடைந்து விட்டீர்கள் என்று பொருள்.