கே.எஸ்.கிருஷ்ணவேனி
தமிழ் சினிமா உலகில் இயக்குனர் சிகரம் என கொண்டாடப்படுபவர் கே.பாலச்சந்தர். ஏராளமான வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் கைலாசம் பாலச்சந்தரான இவர் கே.பாலச்சந்தர் என அழைக்கப்பட்டார்.
பல நட்சத்திரங்களை உருவாக்கிய 'இயக்குனர் சிகரம்' பாலச்சந்தர் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த நல்லமாங்குடியில் 1930 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி பிறந்தவர்.
நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்து பல சாதனைகளை படைத்தவர். இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடை நாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். 'கவிதாலயா' என்ற சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவியவர்.
சென்னை ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் மத்திய அரசு பணியில் இருந்த பாலச்சந்தர் கலையின் மேல் இருந்த தாக்கத்தால் நாடகங்கள் நடத்தினார்.
இவரால் பின் நாட்களில் திரைத்துறையில் பிரபலமாக விளங்கிய ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தரராஜன், நாகேஷ் போன்றவர்கள் எல்லாம் இவரின் நாடகங்களில் மேடை ஏறியவர்கள் தான்.
இவரின் முதல் படமான 'நீர்க்குமிழி' (1965) முதல் கடைசி படமான 'பொய்' (2006) வரை புரட்சிகரமான கதைகளை படமாக்கி வரலாறு படைத்தவர்.
பக்கம் பக்கமாக வசனங்கள் கொண்ட திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த வேளையில் இவரின் வசனங்கள் 'நச்' சென்று பொட்டில் அடித்தார் போல் இருப்பதுடன் சிறந்த கதை அம்சங்களும் கொண்டதாக அமைந்தன.
1973 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'அரங்கேற்றம்' திரைப்படம் அதன் கருத்துக்காகவும், கையாளுமைக்காகவும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இவர் தமிழ் சினிமாவில் தனக்கென தனியாக பாதையை அமைத்துக் கொண்டவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தன் 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர். கமல்ஹாசனை கதாநாயகனாக ஆக்கியவரும் இவர்தான்.
வில்லன்களான நாசர் மற்றும் பிரகாஷ்ராஜ் போன்றவர்களையும், நகைச்சுவை நடிகர் விவேக்கையும் அறிமுகம் செய்தவர்.
ஒருபுறம் பெண்களின் உணர்வுகளையும் காதலையும் இதமாக எடுத்துரைத்தாலும் இன்னொரு புறம் சமூக சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளை சாட்டையால் அடித்து விளாசி தள்ளியவர்.
உன்னால் முடியும் தம்பி, எதிர்நீச்சல், வறுமையின் நிறம் சிவப்பு, தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை போன்றவை அப்படி அமைந்த திரைப்படங்கள் தான்.
பாலச்சந்தர் அவர்கள் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழிப் படங்களையும் இயக்கியுள்ளார். பாலச்சந்தர் அவர்கள் 'கையளவு மனசு' போன்ற தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். அந்த தொடர்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
1987 ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருதையும், 2010 ஆம் ஆண்டு 'தாதா சாகெப் பால்கே' விருதையும் மத்திய அரசு K.பாலச்சந்தர் அவர்களுக்கு வழங்கி கௌரவப்படுத்தியது.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி இயக்குனர் சிகரம் அவர்கள் காலமானார். ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் என்றும் மக்கள் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.