கே.எஸ்.கிருஷ்ணவேனி
ஒடிசாவில் அமைந்துள்ள பூரி ஜெகந்நாதர் கோவிலில் வீற்றிருக்கும் விஷ்ணு பகவான் தினம் காலையில் ராமேஸ்வரம் சென்று மதியம் பூரி திரும்புவதாக ஒரு ஐதீகம். எனவே இங்கு மதிய உணவு மிகவும் தடபுடலான விருந்தாக சமைக்கப்படும்.
பூரி ஜெகந்நாதர் கோவிலின் சமையலறை உலகிலேயே மிகப்பெரியது. அத்துடன் பாரம்பரியம் மிக்கது. கோயிலின் சமையலறை ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு சமைக்கும் அளவுக்கு திறன் பெற்றது.
இங்கு 56 வகையான சைவ உணவுகள் சமைக்கப்படுகின்றன. கங்கா, யமுனா எனப்படும் சமையலறைக்கு அருகில் உள்ள இரண்டு கிணறுகளிலிருந்து நீர் எடுக்கப்பட்டு அதைக் கொண்டு மண் பானைகளில் சமையல் செய்யப்படுகிறது.
இங்கு விறகு அடுப்பில் உணவு சமைக்கப்படுகிறது. கோவிலின் சமையலறையில் ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு மண் பாத்திரங்கள் அடுக்கப்பட்டு சமைக்கப்படுகிறது. அப்படி சமைக்கும் போது அடியில் உள்ள பானையில் உணவு வேகுவதற்கு முன்பே உச்சியில் உள்ள முதல் பானையின் உணவு வெந்து விடுவது அதிசயமாக கூறப்படுகிறது.
தினந்தோறும் புது புது மண் பானைகளில் தான் சமையல் நடைபெறுகிறது. தினம் தோறும் சமைத்த பின் மண்பானைகள் உடைக்கப்பட்டு விடுகின்றன.
இங்கு சமைக்கப்படும் உணவின் அளவு எல்லா நாட்களிலும் ஒன்றாகத்தான் அதாவது ஒரே அளவாகத்தான் இருக்கும். வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை அதிகமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு அனைவருக்கும் சாப்பிட கிடைக்கும்.
இங்கு சமைக்கப்படும் அனைத்து உணவுகளும் பேரரசி மகாலட்சுமி தேவியால் மேற்பார்வை இடப்படுவதாக கூறப்படுகிறது.
மகா பிரசாதம் இரண்டு வகைப்படும். ஒன்று சங்குடி மகா பிரசாத். மற்றொன்று சுக்கில மகா பிரசாத். இரண்டு வகைகளுமே கோவிலின் ஆனந்த பஜாரில் விற்பனைக்கு கிடைக்கும்.
சங்குடி பிரசாதத்தில் அரிசி, நெய் சாதம், கலந்த சாதம், இனிப்பு பருப்பு காய்கறிகள் கலந்த சாதம், பல்வேறு வகையான கலவைக் கறிகள், கஞ்சி போன்ற உணவுகள் அடங்கும். இவை அனைத்தும் சம்பிரதாய முறைகளில் இறைவனுக்கு படைக்கப்படுகின்றன.
வழிபாட்டின் போது தினமும் 56 வகையான பிரசாதங்கள் இறைவனுக்கு வழங்கப்படுகி. இவை அனைத்துமே கோவிலில் உள்ள சமையலறையில் தயாரிக்கப்பட்டுன்றன.
சுக்கில மகா பிரசாத் என்பது உலர் இனிப்பு வகைகளை கொண்டது. இவை தவிர மற்றொரு வகை உலர் மகாபிரசாதம் 'நிர்மல்யா' என அழைக்கப்படும் 'உலர்ந்த அரிசி' பிரசாதம். இது 'கைபல்யா' என்றும் அழைக்கப்படுகிறது.
சமைத்த உணவு முதலில் ஜெகநாதருக்கும் பின்னர் விமலா தேவிக்கும் நைவேதிக்கப்பட்ட பிறகு மகா பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோவிலின் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆனந்த் பஜாரில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உணவருந்துகிறார்கள்.
ரத யாத்திரையின் முதல் நாள் முதல் பூரி ஜெகன்னாதர் சிம்மாசனத்திற்கு திரும்பும் நாள் வரை மகா பிரசாதம் வழங்கப்படுவது நிறுத்தப்படுகிறது.
விஷ்ணு பகவான் ராமேஸ்வரத்தில் குளித்து, பத்ரிநாத்தில் தியானம் செய்து, பூரியில் உணவருந்தி, துவாரகாவில் ஓய்வு எடுக்கிறார் என்று கூறப்படுகிறது. எனவே இங்கு சமைக்கப்படும் உணவுகள் மகா பிரசாத் என அழைக்கப்படுகின்றன.