கே.எஸ்.கிருஷ்ணவேனி
ஆடி மாதத்தில் அம்மன் பாடல்கள் எல்லா கோவில்களிலும் ஒலிக்கும். அதில் முக்கால்வாசி நம்ம எல் ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் தான். சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த எல் ஆர் ஈஸ்வரி இசை உலகில் பொன்விழா கண்டவர்.
கோரஸ் பாடகியாக இருந்து முன்னணிப் பாடகியாக மாறியவர். தமிழ் சினிமா பாடல்களில் உச்சஸ்தாயி குரலுக்கு பெயர் பெற்றவர். பக்தி பாடல்கள் மூலம் தமிழகத்தில் மிகவும் பிரபலமானவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நிறைய பாடல்களை பாடியுள்ளார். மனோகரா படத்தில் முதன் முதலில் கோரஸ் பாடி ஐந்தாறு வருடங்கள் கோரஸ் பாடகியாகவே இருந்தவர்.
இவரது முழுப் பெயர் லூர்து மேரி ராஜேஸ்வரி. எல்.ஆர். ஈஸ்வரியின் தாய் ஜெமினி ஸ்டுடியோவில் குழு பாடகியாக இருந்தவர். அவரைத் தொடர்ந்து ஈஸ்வரியும் கோரஸ் பாட தாயுடன் சென்றார்.
ஏ. பி. நாகராஜன் தயாரித்த படத்திற்கு கோரஸ் பாடுவதற்காக சென்ற ஈஸ்வரி அங்கே பாட வேண்டிய பெண் வராததால் ஹம்மிங் பாடினார். இதுதான் அவர் தமிழ் சினிமாவில் முதலில் கொடுத்த குரல்.
இவரது குரல் வளத்தை பாராட்டிய ஏபி நாகராஜன் அவர்கள் எல் ஆர் ஈஸ்வரி என்று பெயரை மாற்றினார். இவர் தயாரிப்பில் உருவான நல்ல இடத்து சம்பந்தம் என்ற படத்தில் பாடலை சிறப்பாக பாடி அறிமுகமானார்.
பின்பு பாசமலர் படத்திற்காக 'வாராயோ தோழி வாராயோ' என்ற பாடல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார். இன்றும் தமிழக திருமண வீடுகளில் இந்தப் பாடல் தான் ஒலிக்கிறது.
இதை அடுத்து 'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை', 'இலந்த பழம் இலந்த பழம்', 'காதோடுதான் நான் பாடுவேன்' என ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்தார்.
ஒஸ்தி படத்தில் 'கலாசலா' பாடல் பாடி அது பெரிய ஹிட்டாகி 14 விருதுகள் பெற்றவர். மூக்குத்தி அம்மன் படத்திலும் 'மூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம்' என்ற பாடலை பாடியுள்ளார்.
திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி ஆன்மீகப் பாடல்களையும் ஏராளமாக பாடி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்.
'செல்லாத்தா.. செல்ல மாரியாத்தா', 'மாரியம்மா எங்கள் மாரியம்மா', 'கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா' என ஏராளமான பாடல்கள் இன்றும் அம்மன் கோயில்களில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
இசைக்காக இவர் எந்த பயிற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்.
இன்றளவும் இவருடைய பாடல்கள் ஒலிக்காமல் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவதில்லை. ஆடி மாசம் பொறந்தாலே 'செல்லாத்தா செல்ல மாரியாத்தா' என்ற அம்மன் பக்தி பாடல் ஒலிக்காத கோவில்களே கிடையாது.
பி. சுசீலா, எஸ் ஜானகி என்ற இரண்டு பெரிய ஆளுமைகளுக்கும் அப்பால் தன்னந்தனியாக தனித்து வளர்ந்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் இவர்.