பாரதி
1996ம் ஆண்டே பிரபு தேவா நடித்த 'லவ் பேர்ட்ஸ்' மற்றும் கார்த்திக் நடித்த 'கோகுலத்தில் சீதை' ஆகிய படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்தார் விஜய் சேதுபதி.
2004ம் ஆண்டு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான 'எம்.குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி' படத்தில் ஒரு பாக்ஸராக நடித்தார் விஜய் சேதுபதி.
புதுபேட்டை, வெண்ணிலா கபடி குழு, நான் மஹான் அல்ல, லீ, பலே பாண்டியா போன்ற பல படங்களில் பல வருடங்களாக துணை நடிகராகவே நடித்து வந்தார், விஜய் சேதுபதி.
2011ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தர பாண்டியன் படத்தில் வில்லனாக தடம் பதித்து, அப்படத்திற்கான சிறந்த வில்லன் விருதை பெற்றார்.
இப்படி துணை நடிகராகவும் வில்லனாகவும் நடித்து வந்த விஜய் சேதுபதி, 2012ம் ஆண்டு பீட்சா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அதே 2012ம் ஆண்டு 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் “ப்பா” என்ற வசனம் மூலம் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து வெளியான சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி, ஜிகர்தண்டா, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றன.
2015ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். படத்தின் இசை மிகப்பெரிய ப்ளஸாக அமைந்தது. விஜய் சேதுபதிக்கு இப்படம் நல்லதொரு திருப்புமுனையாக இருந்தது என்றால் மிகையாகாது.
இந்தப் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் கம்மிட்டாகி, ஒரு ஆண்டில் அதிக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இவர் 'மக்கள் செல்வன்' ஆனார்.
விக்ரம் வேதா, 96, இமைக்கா நொடிகள், பேட்ட, சங்கத்தமிழன், சிந்துபாத், க.பே.ரனசிங்கம் போன்ற படங்கள் அவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகின. இதன்மூலம் மக்கள் மனதில் அவர் நீங்கா இடம் பிடித்தார்.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதியின் தனித்துவ நடிப்பு சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 'எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பேன்' என்பதை இந்த கதாபாத்திரத்தின் மூலம் நிரூபித்தார் விஜய் சேதுபதி.
கடைசி விவசாயி படத்தில் அவரின் எதார்த்தமான நடிப்பினால் பல விருதுகளை வென்றார்.
பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த விஜய் சேதுபதி, வில்லனாகவும் நடித்தார். குறிப்பாக விக்ரம் வேதா, மாஸ்டர், விக்ரம் மற்றும் ஜவான் போன்ற திரைப்படங்கள் மெகா ஹிட் அடித்தன.
தற்போது விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' இந்த வாரம் ஜூன் 14 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இப்பட ப்ரமோஷனில் பேசிய விஜய் சேதுபதி, "திரைப்படத் துறையில் நடிகனாக எனது பயணம் நிறைவாக இருக்கிறது. ஆனால், முழு திருப்தி அடைய முடியவில்லை. படங்களை இயக்குவதில் நான் ஆர்வமாக உள்ளேன். இனி வரும் காலங்களில் விரைவிலேயே இயக்குநராக வலம் வருவேன்" என்று சொன்னது அவரை விரைவில் இயக்குனராக பார்க்க மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.