நான்சி மலர்
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இந்த வருடத்திற்கான 96 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது.
இந்த விழாவில், கிரிஸ்டோபர் நோலனின் பயோபிக் திரைப்படமான ஓப்பன்ஹேய்மர் (Oppenheimer) 13 பிரிவுகளில் நாமினேஷன் செய்யப்பட்டு அதில் மொத்தம் 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகர் விருது ஆகியவையும் அதில் அடங்கும். இத்தகைய பெருமைக்குரிய திரைப்படத்தை எடுத்த கிரிஸ்டோபர் நோலன் யாரென்று தெரிஞ்சுக்கலாம் வாங்க.
கிரிஸ்டோபர் நோலன் பிரிட்டிஷ் அமெரிக்க திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் வித்தியாசமான மற்றும் மர்மமான படங்களை எடுத்து பார்வையாளர்களை மிரள வைப்பதில் வல்லவர்.
21ஆம் நூற்றாண்டின் இணையற்ற இயக்குனர் என்று எவரேனும் உண்டெனில் அந்த பெருமை கிரிஸ்டோபர் நோலனையே சேரும். இவர் எடுக்கும் படங்கள் அனைத்துமே ஹிட் மற்றும் அதிக வசூலை ஈட்டி தரக்கூடிய படங்களாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இப்போது இருக்கும் இளைய தலைமுறை ரசிகர்களிடம் தனக்கென தனி பெயரையும், புகழையும் பெற்று வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கனர்கள் இவரை ஒரு வழிகாட்டியாக பின் தொடர்கிறார்கள்.
கிரிஸ்டோபர் நோலன் 30 ஜூலை 1970ல் லண்டனில் பிறந்தார். இவர் இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல அவதாரங்களை எடுத்துள்ளார்.
நோலன் 1993 முதல் தற்போது வரை திரைத்துறையில் கோலோச்சி வருகிறார். இவருடைய மனைவி எமா தாமஸூம் தயாரிப்பாளரே!
இவருடைய குறிப்பிடப்பட வேண்டிய திரைப்படங்கள், மெமன்டோ (Memento), இன்சோம்னியா (Insomnia), டார்க் நைட் டிரையாலஜி (Dark knight triology), பிரெஸ்டீஜ் (Prestige), இன்செப்ஷன் (Inception), டெனட் (Tenet), இன்டர்ஸ்டெல்லார் (Interstellar) ஆகியவை.
சமீபத்தில் வெளியாகிய இவருடைய படமான ஓப்பன்ஹெய்மர் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இன்றும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. உலகளவில் 948 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்ட பல இயக்குநர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு நோலன் தன்னுடைய முதல் ஆஸ்கரை சிறந்த இயக்குநனருக்கான பிரிவில் வென்றுள்ளார்.
சிறந்த நடிகராக கிளியன் முர்ப்பியும், சிறந்த துணை நடிகருக்கான விருதை ராபர்ட் டவுனி ஜூனியரும் வென்றுள்ளனர்.
சிறந்த படத்தொகுப்பிற்கு ஜெனிபர் லேம், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ஹோ ய்தி வான், சிறந்த இசைக்கான விருதையும் ஓப்பன்ஹெய்மர் பெற்றுள்ளது.
நோலன் தனது ஆஸ்கர் உரையில், ’’இந்த திரைப்பயணம் எங்கே செல்கிறது என்று எனக்கு தெரியவில்லை. எனினும் நான் அதில் அர்த்தமுள்ள அங்கம் வகிக்கிறேன் என்று நீங்கள் நினைப்பது எனக்கு மிகவும் முக்கியமானதாகும்’’ என்று கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப்போரின் போது ஓப்பன்ஹெய்மர் என்னும் விஞ்ஞானி அணுகுண்டை தயாரிப்பதற்கு என்னென்ன சவால்களை எதிர்க்கொண்டார் என்பதே கதையாகும்.
அப்படி அவர் கண்டுப்பிடித்த அணுகுண்டே இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வருவதற்கான காரணமாக இருந்தது.
அதேசமயம் பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிர் ஜப்பானில் போவதற்கும் காரணமாகி விடுகிறது.
அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றியும், அணுகுண்டை தயாரிக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சியுமே ஓப்பன்ஹெய்மர் திரைப்படமாகும்.
நோலன் இதுவரை 8 முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓப்பன்ஹெய்மருக்காக கிரிஸ்டோபர் நோலன் முதல் முறையாக ஆஸ்கர் விருதைப் பெறுவது அவருடைய ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.