கண்மணி தங்கராஜ்
ஆரம்ப காலங்களில் பண்டமாற்று முறையில் மட்டுமே கொடுக்கல் வாங்கல் மற்றும் வாணிபம் செய்யப்பட்டு வந்தது.
மொகலாய மன்னர் ஹுமாயூனை வீழ்த்தி டெல்லியை 7 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த ஷெர்ஷா சுரி என்பவர் தான் கி.பி. 1540ம் ஆண்டு கால கட்டத்தில் ‘ரூபியா’ எனும் 11.5 கிராம் எடையிலான, வெள்ளி நாணயத்தை முதன்முதலாக அச்சிட்டு பயன்பாட்டிற்காக வெளியிட்டார்.
அதன்பிறகு 1882ம் ஆண்டு முதல் முறையாக காகிதப்பணம் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் 19ம் நூற்றாண்டின் பெரும்பகுதியிலும் இந்தியாவில் வெள்ளி நாணயங்களின் பயன்பாடும் இருந்துகொண்டேதான் இருந்தது.
அதே சமையம் ஹிந்துஸ்தான் வங்கி, பெங்கால் வங்கி, பாம்பே வங்கி, மெட்ராஸ் வங்கி போன்ற தனியார் வங்கிகள் இந்த ரூபாய் நோட்டுகளை முதலில் அச்சிடத்தொடங்கின.
1938 ஜனவரி மாதம் தான் ஆர்பிஐ முதன் முதலாக 5 ரூபாய் நோட்டை வெளியிட்டது. அந்த ரூபாய் நோட்டில் ஆறாவது கிங் ஜார்ஜின் உருவப்படம் இடம்பெற்றிருந்தது.
அதன்பின்பு ஆர்பிஐ வெளியிட்ட 10,000 ரூபாய் நோட்டு தான் இந்தியாவில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த ரூபாய் நோட்டுகளும் 1946 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு பின்னர் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.
இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக், தேவாஸ், மைசூர், சல்போனி போன்ற இடங்களில் தான் அச்சிடப்படுகின்றன.
அதேபோல நாணயங்கள் மும்பை, நொய்டா, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் தான் தயாரிக்கப்படுகின்றன.
பொதுவாகவே ரூபாய் நோட்டுகள் பேப்பர்களால் அச்சடிக்கப்படுவது இல்லை. அவை பருத்தி மற்றும் பருத்தி துணியினாலான பொருட்களினால் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
2010 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ வங்கியின் 75 ஆண்டைக் குறிக்கும் சின்னமாக 75 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.
அந்த வரிசையில் 2011 ஆம் ஆண்டு ரபேந்திரநாத் தாகூரின் 150 வது பிறந்த நாளைக் சிறப்பிக்கும் விதமாக 150 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.
2012 ஆம் ஆண்டு தமிழகத்தின் தஞ்சையில் உள்ள 1000 வருடங்கள் பழைமை வாய்ந்த பிரகதீஷ்வரர் கோவிலின் நினைவாக 1000 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.
கண்பார்வை இழந்தவர்களுக்கும் பணத்தின் பயன்பாடு எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே டயமண்ட், வட்டம், முக்கோணம்,சதுரம், போன்ற குறியீடுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுப் பயன்படுத்தி வருகின்றன.
இந்திய காகித பணத்தில் நான்கு தலை கொண்ட சிங்க முகம் பொறிக்கப்பட்டு வந்த நிலையில், 1996ம் ஆண்டு முதல் தான் அதீகாரப்பூர்வமாக காந்திஜியின் முகம் பொறிக்கப்பட்டு வருகிறது.
அதோடு காலத்திற்கேற்றார் போல வாட்டர் மார்க் மற்றும் போலி ரூபாய் நோட்டுகளை தவிர்ப்பதற்கான பாதுகாப்பு அம்சங்களோடு பொருந்தியவாறு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 1947 ஆம் ஆண்டு அமெரிக்க டாலரின் மதிப்பும் இந்திய ரூபாயின் மதிப்பும் சமமாக இருந்துள்ளது. பின்னர் பொருளாதார சரிவு மற்றும் பண வீக்கத்தால் டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.