ராஜமருதவேல்
என் வழி தனி வழி - எப்போதும் தனித்துவம்தான் ஒருவரை முன்னிலைப் படுத்தும். அப்போது இருந்த அனைத்து நடிகர்களும் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் திரைப் படங்களைத்தேடி நடித்தனர். ரஜினியும் முதலில் அப்படி நடித்தாலும், தனது பாணியை ஜனரஞ்சகமாக மாற்றிக்கொண்டு, திரையுலகில் உச்சம் பெற்றார்.
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருப்பது கிடைக்காது - உங்களுக்கு இதுதான் கிடைக்க வேண்டும் என்று இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. உங்களுக்கு கிடைக்க கூடாது என்று இருக்கும் விஷயம் எப்போதும் கிடைக்காது. உங்களுக்கு என்று விதிக்கப்பட்டது உங்களை ஒருநாள் அடையும்.
முதலாளிக தாடி வளர்த்தா பிசின்னு அர்த்தம், தொழிலாளிங்க தாடி வளர்த்தா பசின்னு அர்த்தம் - பணக்காரர்கள் தாடி வளர்த்தால், அதை மழிக்க அவருக்கு நேரமில்லை என்று பேசிக்கொள்வார்கள். பணக்காரர்கள் கிழிந்த உடையை அணிந்தால் கூட அதை நாகரீகம் என்றும் சொல்வார்கள். அதையே ஏழை செய்தால் அவருக்கு தாடி எடுக்க கூட பணம் இல்லை என்று பரிதாபமாக பேசுவார்கள்.
கெட்டுப் போனவன் நல்லா வாழலாம். ஆனா, நல்லா வாழ்ந்தவன் கெட்டு போகக்கூடாது - வாழ்க்கையில் வறுமையில் வாடியவன் ஒருநாள் நன்றாக வாழத் தொடங்குவது நல்ல உதாரணமாக பார்க்கப்படுகிறது. அதே வேளையில் நன்றாக செல்வாக்கோடு வாழ்ந்தவர்கள் தங்களது வாழ்க்கையில் வீழ்ச்சி அடையக் கூடாது, அது தவறான உதாரணமாக மாறிவிடும்.
நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி - எந்த ஒரு செயலையும் ஒருமுறை செய்ய, நூறு முறை யோசித்துக் கொள்ளவேண்டும்.
நீ விரும்புறவள கட்டிக்கிறத விட உன்ன விரும்புறவள கட்டிக்கிட்டா, உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் - ஒருவர் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்துக் கொண்டால், மனதளவில் வென்று விட்டோம் என்ற திருப்திதான் கிடைக்கும். தான் மட்டும் விரும்பிய அந்த பெண்ணிடம் காதல் கிடைக்குமா? என்பதில் நிச்சயம் இல்லை. தன்னை விரும்பிய பெண்ணை திருமணம் செய்துக் கொண்டால், அவள் உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்துக்கொள்வாள்.
கண்ணா! பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாதான் வரும் - ஒருவனின் வீரம் எப்போதும் தன் பின்னால் உள்ள கூட்டத்தை நம்பி இருக்கக்கூடாது. வீரம் தன்னிடமிருந்து வரவேண்டும். கூட்டமாக வருவதன் பெயர் வீரம் அல்ல, எந்த ஒரு செயலையும் தனியாக செய்யும் துணிச்சல் இருக்க வேண்டும். அதுதான் வீரம் என்று போற்றப்படும்.
ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான் - நாம் என்ன செய்ய இருக்கிறோமோ அது கடவுளின் தீர்மானம் படியே நடக்கும். கடவுள் எழுதிய விதியின்படியே மனிதனின் செயல்கள் உள்ளது.
தீப்பட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினாதான் தீப்பிடிக்கும், ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசினாலும் தீ பிடிக்கும் - மதம் கொண்ட யானையின் அருகே செல்லக்கூடாது, அதையும் மீறி யானையின் அருகே சென்றால் அவரது கதையும் அன்றோடு முடிந்துவிடும். அதுபோல மிகவும் கோபம் கொண்ட மனிதனை சீண்டினால் சீண்டுபவருக்கு அதிக துன்பம் கிடைக்கும்.
நல்லவனா இருக்கலாம். ஆனா, ரொம்ப நல்லவனா இருக்கக் கூடாது - எப்போதும் நல்லவனாக இருக்க முடியாது. சில நேரங்களில் வல்லவனாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மற்றவர்கள் எளிதில் ஏமாற்றி விடுவார்கள்.
இந்த உலகத்தில எத எடுத்தாலும் ஒன்னவிட ஒன்னு பெட்டராதான் தெரியும் - எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒன்றைவிட ஒன்று சிறந்ததாகத்தான் இருக்கும். அதற்காக நாம் யோசித்துக் கொண்டே இருந்தால் எதுவும் நிலைக்காது. ஒரு பொருள் சிறப்பானதா என்று ஆராய்வதைவிட, அது நமக்கு தகுந்ததா என்று ஆராயவேண்டும்.