ராகவ்குமார்
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தயாரித்து இயக்கி வெளிவந்துள்ள படம் ‘டீன்ஸ்’.
இப்படத்தை பார்த்திபனுடன் சேர்ந்து கீர்த்தனா பார்த்திபன், கால்டுவெல் வெண்புலி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ரிச் ஸ்ரீனிவாசன், ரஞ்சித் ஆகியோரும் தயாரித்துள்ளார்கள்.
13 டீன் ஏஜ் பள்ளி மாணவர்களை வைத்து, புதுமையாக ஒரு படைப்பைத் தர 'முயற்சி' செய்துள்ளார் பார்த்திபன். முயற்சி பெரிதாக எதையும் தந்துவிடவில்லை. பார்த்திபன் விஞ்ஞானியாக சிறப்பாக நடித்துள்ளார் என்பது மட்டுமே சமாதானம்.
பள்ளியில் படிக்கும் 13 மாணவ மாணவிகள் வகுப்பை கட் அடித்துவிட்டு ஒரு ஊருக்குச் செல்கிறார்கள். செல்லும் வழியில் ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். இந்தக் காணாமல் போவதற்குப் பின்னால் இருக்கும் மர்மம்தான் கதை.
டீன் ஏஜர்களின் நடிப்பு நன்றாக உள்ளது. நைனிகாவாக நடித்த பெண் மற்றும் அய்யங்காளியாக நடித்த பையனின் நடிப்பும் நன்றாகவே உள்ளது.
யோகி பாபு வழக்கம் போல ‘எனக்கும் சிரிப்புக்கும் சம்பந்தமில்லை’ என்கிறார்.
இம்மானின் இசை சுமார் ரகம்.
அமானுஷ்யம், பேய் என செல்லும் கதை ஒருகட்டத்தில் வேற்று கிரக வாசிகள், விண்வெளி கப்பல் என பாதை மாறிச் செல்கிறது.
ஹாலிவுட்டில் ‘போதும்’ என நிறுத்திவிட்ட வேற்று கிரக வாசிகள் கான்செப்ட்டை, மீண்டும் தூசி தட்டி தந்திருக்கிறார் பார்த்திபன். ஆனால் தெளிவு இல்லை.
நட்பு, காதல், சமூக வலைதல பயன்பாடு போன்ற சமகால டீன் ஏஜர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இந்த ‘டீன்ஸ்’ பேசும் என்று நம்பிச் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இயக்கிய ‘ஒத்த செருப்பு’, ஒரே ஷாட்டில் எடுத்த ‘இரவின் நிழல்’, ‘கதையே இல்லாத கதை’, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்ற சமீப கால சிறந்த பார்த்திபன் ஸ்டைல் படங்கள் வரிசையில் இந்தப் படத்தை வைக்கமுடியாது.
விண்வெளி சப்ஜெக்டில் படம் எடுக்க இங்க பலர் இருக்காங்க பார்த்திபன் சார்! அதையே எடுக்கப்போய், ‘புதுமை’ என்கிற உங்க ஸ்டைல விட்டுட்டீங்களே!