நான்சி மலர்
பரதநாட்டியக் கலை தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனமாகும். இந்த நடனம் இந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. நாட்டியம், முகபாவம், முத்திரைகள், தாளம் மூலமாக ஆன்மீக கதைகளை விளக்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில் சிறப்பங்களில் பரதநாட்டியம் கலை வடிவமாக இடம் பெற்றிருப்பதை காண முடியும்.
கதக் நடனம் உத்திரபிரதேசத்தின் பாரம்பரிய நடனமாகும். 'கதக்' என்பது சமஸ்கிருத வார்த்தையான 'கதா'வில் இருந்து தோன்றியது. 'கதா' என்றால் கதை என்று பொருள். கால்களை பயன்படுத்தி ஆடும் போது அழகிய சைகைகளை செய்வது இதன் தனித்துவம். ஹிந்துஸ்தானி இசைக்கு ஆடும் போது கதக் நடனம் முழுமைப் பெறுகிறது.
கேரளாவின் பாரம்பரிய நடனம் கதகளியாகும். முகத்தில் ஒப்பனையுடன், அழகிய முகபாவனையோடு, கண் அசைவுகளுடன் வண்ணமையமான உடைகள் உடுத்தி கை அசைவுகள் மூலம் கதைகளை விளக்கும் அழகிய நடனமாகும்.
குச்சிப்புடி ஆந்திராவின் பாரம்பரிய நடனமாகும். ஆந்திராவில் உள்ள 'குச்சுப்புடி' என்ற கிராமத்தின் பெயர் இந்த நடனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குச்சுப்புடி அதனுடைய அழகிய பாவனைக்கும், ஆற்றல்மிக்க நடனத்திற்கும் பெயர் போனதாகும்.
மணிப்பூரின் பாரம்பரிய நடனம் மணிப்பூரியாகும். இந்த நடனம் 'ராஸ்லீலா' என்று சொல்லப்படும் ராதா கிருஷ்ணரின் காதல் கதையை விளக்குவதாக அமைந்திருக்கும். சுற்றி வட்டமான நடனம் ஆடுவதும், பறை மற்றும் புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படும்.
ஒடிசாவின் பாரம்பரிய நடனம் ஒடிசியாகும். இந்த நடனம் உதயகிரி குகைகள் மற்றும் கோவிலில் உள்ள நடன சிற்பங்களில் இருந்து உருவானதாகும். முத்திரை மற்றும் அபினயம் மூலமாக ஆன்மீக கதைகளை விளக்குகிறது இந்த நடனம்.
மோகினியாட்டம் கேரளாவின் பாரம்பரிய நடனமாகும். விஷ்ணு பகவானின் அவதாரமான மோகினியின் பெயர் இந்த நடனத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. மோகினி அசுரர்களை நடனத்தின் மூலம் மயக்கி தேவர்களுக்கு அமிர்தத்தை கொடுப்பாள். இந்த நடனத்தை பெண்கள் நளினத்துடனும், பாவனையுடனும் அழகாக ஆடுவார்கள். அது பார்ப்பவர்களை மயக்கக்கூடியதாக இருக்கும்.
பாங்ரா நடனம் பஞ்சாப்பின் பாரம்பரிய நடனமாக கருதப்படுகிறது. விவசாயிகள் அறுவடை காலத்தை கொண்டாட இந்த நடனத்தை ஆடுவார்கள். குதிப்பது, சுற்றுவது என்று இந்த நடனத்தில் நிறைய அசைவுகள் இருக்கும். 'டோல்' என்று அழைக்கப்படும் பெரிய பறை போன்ற இசைக்கருவி பயன்படுத்தப்படும். பெண்கள் மற்றும் ஆண்கள் வண்ணமயமான உடைகளை அணிந்து மகிழ்ச்சியாக ஆடக்கூடிய நடனமாக பாங்ரா சொல்லப்படுகிறது.
அசாம் மாநிலத்தின் பாரம்பரிய நடனம் சத்திரியாவாகும். 15 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீமந்த் சங்கரதேவாவால் உருவாக்கப்பட்டது. ஆண் துறவிகளால் ஆடப்பட்ட இந்த நடனம் காலப்போக்கில் ஆண் மற்றும் பெண் இருவராலும் ஆடப்படுகிறது.
சாவ் நடனம் மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசாவின் பாரம்பரிய நடனமாகும். தற்காப்பு மற்றும் முகமூடி அணிந்து ஆடுவது இதனுடைய சிறப்பம்சம் ஆகும். ராமாயணம் மற்றும் மகாபாரத புராணங்களை இந்த நடனத்தின் மூலம் விளக்குகிறார்கள்.