செளமியா சுப்ரமணியன்
ஒருவரது நினைவாக சிலை அமைப்பது, பெருமையைப் பறைச்சாற்ற சிலை அமைப்பது என்பது பண்டைய காலம் தொடங்கி, நவீன காலம் வரை உலகம் முழுவதும் நடக்கிற ஒன்றாகும். அப்படி இருக்கின்ற 10 புகழ்பெற்ற சிலைகள்.
மவாய்: தென்னமெரிக்க நாடான சிலியின் ஆளுகையின் கீழ் வரும் ஈஸ்டர் தீவில் இந்த மர்மான மவாய் சிலைகள் அமைந்துள்ளன. கடற்கரை ஓரம் ஒற்றை கல்லால் ஆன தலை மட்டும் கொண்ட சிலைகள் மிரட்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இது கிறிஸ்து பிறப்பிற்கு முன் 1250 - 1500-க்கு இடையில் பாலினேசிய குடியேற்றக்காரர்களால் செதுக்கப்பட்டவை. இறந்த மூதாதையர்களை பிரதிபலிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
மீட்பர் கிறிஸ்து சிலை: மீட்பர் கிறிஸ்து சிலை உலகப் புகழ்பெற்றது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ளது. 2,300 அடி உயர கார்கோவாடோ மலைச்சிகரத்தில் சுமார் 130 அடியில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் பீடம் 31 அடி உயரம். இதன் அகலம் 98 அடி ஆகும்.
சுதந்திர தேவி சிலை: அமெரிக்காவின் சுதந்திர தின நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் பிரான்ஸ் மக்களால் வழங்கப்பட்டது தான் சுதந்திர தேவி சிலை. இது உலகின் மிகவும் பிரபலமான சின்னங்களில் ஒன்றாகும். ஜூலை 1884 இல் பிரான்சில் சிலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, ஓராண்டு கழித்து நியூயார்க்கிற்கு வந்தடைந்தன.
கிரேட் ஸ்பிங்ஸ்: எகிப்தின் கெய்ரோ நகருக்கு அருகே அமைந்துள்ளது இச்சிலை. ஹாலிவுட், கோலிவுட் என பல திரைப்படங்களில் இதைப் பார்த்திருக்கலாம். உலகின் பெரிய மற்றும் பழங்கால சிலைகளில் இதுவும் ஒன்று. இருப்பினும் இது சுற்றியுள்ள பிரமிடுகளை விட கணிசமாக சிறியது. கி.மு., 2500ல் இது கட்டப்பட்டிருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
டேவிட் சிலை: டேவிட் சிலை 1504ல் மைக்கேலேஞ்சலோ என்பவரால் செதுக்கப்பட்ட மறுமலர்ச்சி சிற்பம். 17 அடியில் மார்பில் கல்லில் பைபிள் மன்னர் டேவிட் நிர்வாணமாக சித்தரிக்கப்பட்டிருப்பார். கோலியாத்தை வீழ்த்தியவர் டேவிட். இச்சிலை 1873ல் இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் அகாடமியா கேலரிக்கு மாற்றப்பட்டது. இச்சிற்பத்தை காண பல லட்சம் பேர் அங்கு செல்கின்றனர்.
கிமு 62ல், காமேஜின் மன்னர் ஆன்டியோகஸ் முதலாம் தியோஸ், நெமுருத் மலையின் உச்சியில் தனக்கான கல்லறைகளை கட்டினார். அதில் இரண்டு சிங்கங்கள், இரண்டு கழுகுகள் மற்றும் பல்வேறு கிரேக்க மற்றும் பாரசீக கடவுள்களின் பெரிய சிலைகள் (26 - 30 அடி உயரம்) அமைக்கப்பட்டன. அங்கிருக்கும் உடலற்ற தலைகள் அப்போது ஆரஞ்சு நிறத்தில் மாறும். இது அந்த இடத்தை அமானுஷ்யமாக்கும்.
ஓல்மெக் தலைகள்: ஓல்மெக் என்பது கொலம்பியனுக்கு முந்தைய நாகரீகம். கிமு 1400 முதல் கிமு 400 வரை செழித்து வளர்ந்த இந்த நாகரீகம், தென் - மத்திய மெக்சிகோ பகுதிகளில் பரவியிருந்தது. ஓல்மெக் நாகரிகத்தின் அம்சங்களில் ஒன்று இந்த தலைகள். இதுவரை 17 பிரம்மாண்டமான தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 10 அடியிலிருந்து 4 அடி வரையிலானவை. இதனை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைப் புரிகின்றனர்.
ரஷ்ய தாய் சிலை: தாய்நிலம் அழைக்கிறது என்பதை குறிக்கும் சிலை. கையில் வாளை ஏந்தி நிற்கும் பெண்மணியின் சிற்பம், இரண்டாம் உலகப் போரின் நினைவுச் சின்னம். பீடம் முதல் கையில் உள்ள வாள் நுனி வரை இச்சிலையின் உயரம் 279 அடி. ஸ்டாலின்கிராட் போரின் 200 நாட்களைக் குறிக்கும் இருநூறு படிகள், மலையின் அடிப்பகுதியில் இருந்து நினைவுச்சின்னத்திற்கு இட்டுச் செல்கின்றன.
டெலோஸின் சிங்கங்கள்: கிரேக்கத்தின் மிக முக்கியமான புராண, வரலாற்று மற்றும் தொல்பொருள் தளங்களில் ஒன்று தான் இந்த சிலை அமைந்திருக்கும் இடம். மைக்கோனோஸ் அருகே அமைந்துள்ளது இந்த டெலோஸ் தீவு. அப்பகுதியில் வாழ்ந்த மக்களால் மார்பிளால் செய்யப்பட்ட சிங்கங்கள் அப்பல்லோ கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அதில் 5 சிங்கங்கள் மட்டுமே எஞ்சின. 3 சிங்கங்களின் துண்டுகள் கிடைத்துள்ளன.
கடல்கன்னி சிலை: டென்மார்க்கின் லாஞ்சலினியில் உள்ள கோபன்ஹேகன் துறைமுகத்தில் ஒரு பாறையில் இந்த கடல் கன்னி சிலை அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த சிலை, எட்வர்ட் எரிக்சன் வடிவமைத்தது. லிட்டில் மெர்மெய்ட் நாடகத்தின் நினைவாக அமைக்கப்பட்டது.