A.N.ராகுல்
நவீன கால தொழில்நுட்பங்கள் கிரிக்கெட் விளையாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக வீரர்களின் செயல்திறன் மற்றும் ரசிகர்களின் பார்வை அனுபவத்தை மேம்படுத்த உதவுகின்றன. அப்படி கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் சில சிறந்த தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.
விளிம்பு கண்டறிதல் (Ultra Edge):- ஃபீல்டிங் குழுவால் ‘காட்ச்’ பிடிக்கப்படுவதற்கு முன்பு பந்து மட்டையுடன் தொடர்புகொண்டதா என்பதைத் தீர்மானிக்க மட்டையின் மீது உரசும் ஒலி அதிர்வுகளைக் கண்காணிப்பார்கள். இது சில நேரங்களில் நடுவர் முடிவுகளை மாற்றவும், நியாயமான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் உதவுகிறது.
பந்து கண்காணிப்பு (Ball Tracking):- பந்தின் படங்களை அதிக வேகத்தில் (ஒரு நொடியில் 1/100 பங்கு) படம்பிடிக்கும் தொடர் கேமராக்களை உள்ளடக்கியது. இந்தப் படங்கள் பந்தின் பாதையைக் கணக்கிடப் பயன்படுகின்றன. குறிப்பாக LBW (Leg Before Wicket) முடிவுகளில் நடுவர்களுக்குத் துல்லியமான தீர்ப்பு கொடுக்க உதவி செய்கிறது.
ஸ்மார்ட் பெயில்கள் (Smart Bails):- ஸ்மார்ட் பெயில்களில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை பந்து உராயும்போது ஒரு நொடிக்குள் ஒளிரும். பெயில்கள் ஸ்டம்களில் இருந்து கீழே விழும். இந்தத் தொழில்நுட்பம் துல்லியமான ரன்-அவுட் மற்றும் ஸ்டம்பிங் முடிவுகளுக்கு உதவுகிறது.
பறக்கும் கேமரா (Spider Cam):- கிரவுண்டுக்கு மேலே கெவ்லர் கம்பிகளால்(Kevlar wires) இடைநிறுத்தப்பட்ட கேமரா ஆகும். இது பல்வேறு கோணங்களில் இருந்து காட்சிகளை வழங்குகிறது. நேரடி ஒளிபரப்பின்போது பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
ட்ரோன்கள் (Drones):- போட்டிகளின்போது வான்வழி காட்சிகளைப் படம்பிடித்து, தனித்துவமான கண்ணோட்டங்களை வழங்குகின்றன. வீரர்களின் அசைவுகளையும் ஆய்வு செய்ய உதவுகின்றன.
கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன்:- ஒளிபரப்பின் போது பந்தின் வேகம், ரன் ரேட் மற்றும் பிளேயர் புள்ளிவிவரங்கள் போன்ற முக்கியமான தகவல்களை கிராபிக்ஸ் தொழில்நுட்படத்தால் வீட்டில் தொலைக்காட்சி மூலம் பார்க்க முடிகிறது.
வேக துப்பாக்கி (Speed Gun):- பந்து வீச்சாளர்களின் செயல்திறன் குறித்த நிகழ்நேரத் தரவை வழங்கும். பந்து வீச்சுகளின் வேகத்தை அளவிடும்.
பிட்ச் பார்வை (Pitch Vision):- சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு பிட்ச் நிலைமைகளைப் புரிந்துகொள்ள இதைப் பயன்படுத்துவார்கள்.
ஸ்மார்ட் பால் (Smart ball):- ஸ்மார்ட் பந்துகளில் ஸ்பின் (Spin), சீம் மூவ்மென்ட் (seam movement) மற்றும் ஸ்விங் (swing) பற்றிய தரவுகளை சேகரிக்கும் சென்சார்கள் உள்ளன, இது பந்துவீச்சாளர்களின் திறமைகளை மேம்படுத்த உதவுகிறது.
அணியக்கூடிய சென்சார்கள் (Wearable Sensors):- இவை பிளேயர் அசைவுகள், இதயத் துடிப்பு மற்றும் சோர்வு நிலைகளைக் கண்காணிக்கும். பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுகள் பயிற்சி மற்றும் மீட்பு உத்திகளை மேம்படுத்த இந்தத் தரவைப் பயன்படுத்துகின்றனர்.
வீரர் செயல்திறன் பகுப்பாய்வு (Player Performance Analytics):- டேட்டாஅனலிட்டிக்ஸ்கருவிகள், பேட்டிங்ஸ்ட்ரைக்ரேட்கள், பந்து வீச்சாளரின் ரன் சிக்கனத்தை மற்றும் பீல்டிங் திறன் உள்ளிட்ட வீரர்களின் செயல்திறன்களைப் பகுப்பாய்வு செய்கின்றன. குழுக்கள் இந்தத்தகவலைப் பயன்படுத்தி தேவைப்படும் மாற்றங்களைச் செய்கின்றனர்.