கண்மணி தங்கராஜ்
கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள வாரணாசி, உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு புனிதத் தலமாகும். வாரணாசி உலகின் மிகப் பழைமையான நகரங்களில் ஒன்றாகும். இது ஆயிரக்கணக்கான ஆண்டு கால வரலாற்றினை சுமந்து கொண்டு வருகிறது.
வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் உலகப் பிரசித்திப் பெற்றது. ‘காசி’ என்பது சிவனின் இருப்பிடமாகவே கருதப்படுகிறது. சிவனும், பார்வதியும் இங்கு வசிப்பதாக இந்து மக்களால் நம்பப்படுகிறது.
இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் சிவலிங்கம் காசியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
பிறப்பின் மோட்சத்தை பெறுவதற்காக வாரணாசியிலேயே தங்கி இருந்து இறப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
வாரணாசியைச் சுற்றி ஏறத்தாழ 23,000 கோயில்கள் இருக்கின்றன. மேலும், அனைத்து தெய்வங்களுக்கும் கோயில்கள் இருப்பதால், உலகிலேயே அதிக கோயில்கள் இருக்கும் நகரமாகவும் வாரணாசி விளங்குகிறது.
இந்நகரம் முழுவதும் பசுமை போர்த்திய மலைக்குன்றுகள் அதிகளவில் உள்ளன. உலகிலேயே அதிக மலைத்தொடர் இருக்கும் நகரமாக விளங்கும் வாரணாசியில் 84 மலைத் தொடர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
வாரணாசியில் பாயும் கங்கை நதிக்கு தனிப் பெருமை உண்டு.
உலகப் புகழ் பெற்ற பனாரஸ் பட்டு கைத்தறி நெசவு மூலம் இங்குதான் தயாரிக்கப்படுகிறது. ஒரு பனாரஸ் பட்டுப் புடவைத் தயாரிக்க ஏறக்குறைய 6 மாதங்கள் ஆகின்றன. இந்த பட்டினை அணிவதற்கு உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் விரும்புகின்றனர்.
‘டெத் ஹோட்டல்’ என அழைக்கப்படும் முக்தி பவன் வாரணாசியில்தான் அமைந்துள்ளது. இந்த நகரில் இறந்தால் மோட்சம் கிடைக்கும் என நம்புபவர்கள் அங்கு சென்று தங்கிக்கொள்வர். ஒருவருக்கு அதிகபட்சமாக 15 நாட்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. அதற்குள் இறக்கவில்லை என்றால், முக்தி பவனில் கொடுக்கப்பட்ட அறையை காலி செய்து விட வேண்டும்.
துளசி தாஸ் மற்றும் முன்ஷி பிரேம் சந்த் போன்ற பல கவிஞர்களும், எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் இந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வாரணாசி இலக்கியத்தின் வாழ்விடமாகவும் அறியப்படுகிறது.
வாரணாசி அதன் பழைய பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஒரு இடமாகும். அந்த வகையில் மழை தாமதமானால், மழைக் கடவுளை மகிழ்விக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், இங்குள்ள தவளைகள் பிடிக்கப்பட்டு, அவற்றிற்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
வேதம் படிக்க விரும்பும் மாணவர்கள் வாரணாசியில்தான் தங்கிப் படிக்க விரும்புகிறார்கள். ஏனெனில், இந்நகரில்தான் வேதம் படித்தவர்கள் மிகவும் அதிகமாக உள்ளனர்.
காசிக்கு ஆண்டுதோறும் சுமார் 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கங்கை நதியில் நீராடி தங்களது பாவங்களைத் தொலைப்பதற்காகவும், மோட்சம் பெறுவதற்காகவும் வருகை தருகின்றனர்.
வாரணாசியில்தான் ஆசியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இருக்கிறது. சடங்குகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மட்டுமின்றி, கல்விக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் இடமாக இது இருப்பதால் 'ஒளி நகரம்' என்று அனைவராலும் அறியப்பட்டு வருகிறது.