இந்திராணி தங்கவேல்
எல்லோருக்குமே கருகருவென்ற அடர்த்தியான நீளமான கூந்தல் இருக்க வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் சில பல காரணங்களால் முடியானது வெடிப்புற்றும், செம்பட்டையாகவும் போய் விடுவது உண்டு. அதை அழகாக பராமரித்து அள்ளி முடியும் வழிமுறைகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
கேசத்தை ஒழுங்காக சுத்தப்படுத்தி, தலைக்கு குளித்து தலையை முறையாக சிக்கு எடுத்து வாரி வந்தாலே போதுமானது. தினமும் இருமுறை அழுந்த வாரி வருவதாலேயே அதனுடைய வளர்ச்சி அதிகப்படுத்தப்படுகிறது.
குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெய் சிறிதளவு தலையில் வைத்து நன்கு அழுத்தி தேய்த்து ஐந்து நிமிடம் ஊற விட்டு பின்னர் குளிர்ந்த வடி கஞ்சியில் சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.
சோப்பில் உள்ள காரம் முடியை அரித்துவிடும் என்பதால் சோப்பு தேய்ப்பதை தவிர்ப்பது நல்லது. அடிக்கடி எண்ணெய் தேய்க்காமல் வெறும் சீயக்காய் தேய்த்து குளிக்கும் பொழுது முடி வெடிக்க ஆரம்பிக்கும். செம்பட்டையாக மாறிவிடும்.
கேசத்தை நன்கு விரித்து, சுத்தமான காற்றில் பறக்க விட்டு விரல்களின் நுனியால் நன்கு அழுத்தி விடும்போது கேசத்தின் வளர்ச்சி பெருமளவு ஊக்குவிக்கப்படுகிறது.
எண்ணெய் தேய்த்து குளித்த பின் தலையை வாரி சிக்கு எடுக்க அதற்கென்று இருக்கும் பிரஷை பயன்படுத்தலாம். தலை வாரும்போது நெற்றியில் இருந்து ஆரம்பித்து மேல்நோக்கி வார வேண்டும். கூந்தலில் சிக்கு எடுக்கும் போது இழுக்காமல் பொறுமையாக நிதானமாக எடுத்து வாரி விட வேண்டும். அப்பொழுதுதான் ரோமக்கால்கள் வலுப்பெறும்.
பொதுவாக உருண்டையான முகம் உடையவர்கள் கழுத்தின் மீது தழையப்படியும் கொண்டை போட்டுக் கொள்வது அழகைத் தரும். இரட்டைப் பின்னலும் இவர்களுக்கு ஏற்றது.
நீண்ட முகமுடையவர்கள் உயரமான கொண்டை போட்டுக் கொண்டால் அழகாக இருக்கும். இதனால் அவர்களுடைய முகத்தின் நீளம் குறைந்து அழகான தோற்றமளிக்கும்.
நீளமான தலை, இரட்டை தலை உடையவர்களுக்கு கோணல் வகிடு ஏற்றதாக இருக்கும்.
சிறிய முகம் உடையவர்களுக்கு சிறிய கொண்டை நன்றாக இருக்கும்.
அகன்ற நெற்றி படைத்தவர்கள் தலையலங்காரம் செய்து முடிக்கும் பொழுது சில முடிகளை நெற்றியின் முன் வழித்து விட்டுக் கொண்டால் நெற்றியின் அகலத்தை மறைக்கலாம்.
முடி நன்றாக செழித்து வளர கருவேப்பிலை, கீரை, பூசணிக்காய், பசும்பால், வெங்காயம் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும்.
முடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்து ரத்தத்தால் அளிக்கப்படுகிறது. ஆகையால் ஆரோக்கியமான உணவு முறைகளை உட்கொண்டால் அழகான கூந்தலைப் பெற முடியும்.