கண்மணி தங்கராஜ்
தென்னிந்தியாவில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணி கோவில் என்பது உலகின் மிகப்பெரிய தங்கக் கோயில் என்ற பெருமைக்குரியது.
செல்வத்தை பெருக்கும் ஸ்ரீ லக்ஷ்மியின் இந்தக் கோவிலானது தமிழ்நாட்டில் வேலூர் நகரில் அமைந்துள்ளது. இது ‘ஸ்ரீ புரம் பொற்கோயில்’ அல்லது ‘ஸ்ரீபுரம் ஸ்ரீ லட்சுமி நாராயணி கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபுரம் என்ற இந்த பகுதியில் சுயம்புவாக ஸ்ரீ நாராயணி தேவியின் சிலை தோன்றியதாகவும், அப்போது அச்சிலையை சுற்றி ஒரு சிறிய கோவில் எழுப்பப்பட்டு வழிபட்டு வந்ததாகவும் இத்தல வரலாறு குறித்து அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாராயணி உபாசகர் ஒருவருக்கு நாராயணி தேவிக்கு தங்கத்தால் ஆன கோவிலை கட்டும் விருப்பம் ஆதலால் அவரது முயற்சியால் கடந்த 2007 ஆம் ஆண்டு இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
ஸ்ரீ நாராயணி கோயிலின் ‘பீடம் அறக்கட்டளையால்’ கட்டப்பட்ட கோயில் வளாகம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த கோயிலை கட்டுவதற்கு சுமார் 600 கோடி ரூபாய் செலவாகியிருப்பதாகவும், அதோடு 1500 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது என்றும் 55000ம் சதுரடி பரப்பளவுக்கு இந்த தங்கக்கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ள லக்ஷ்மி நாராயணி கோயிலானது வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ‘அமிர்தசரஸின் பொற்கோவிலை’ விட இரு மடங்காகும்.
ஸ்ரீ சக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் இந்த லட்சுமிநாராயணி கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் வளாகத்தில் 1.8 கிமீ நட்சத்திர வடிவ பாதையானது ஸ்ரீ சக்கரத்தை குறிக்கும்.
ஸ்ரீ நாராயணி கோயிலில் 70 கிலோ எடையுள்ள மகாலட்சுமியின் சிலை தூய தங்கத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அங்கு பக்தர்களும்கூட தினந்தோறும் அபிஷேகம் செய்யலாம்.
மேலிருந்து இந்தக் கோயிலைப் பார்த்தால் ஸ்ரீசக்கரம் போன்றே தெரியும்படி இதனை அமைத்துள்ளனர்.
நுண்ணிய தனித்துவமான பாணியில் கட்டப்பட்ட ஸ்ரீ லக்ஷ்மி நாராயணி கோயிலில் தான் உலகின் மிகப்பெரிய வீணை உள்ளது.
அதோடு இங்கு ஒளிகொடுக்கும் 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன 10 அடுக்கு கொண்ட ஆயிரம் திரிகள் ஏற்றக்கூடிய விளக்கு உள்ளது.
ஆலய வேலைகளைச் செய்த கைவினைஞர்கள் நேர்த்தியான கலையுணர்வு மூலம் தங்கக் கட்டிகளை அந்தந்த படலங்களில் மிகச்சரியாக பொருத்தி இருக்கின்றனர் .
நன்றாக வடிவமைத்து பின்னர் செப்புத்தகடுகள் மீது இந்த படலங்களை ஏற்றியுள்ளனர்.
கருவறை மற்றும் கர்ப்பகிரகத்திற்கும், கோயிலின் வெளிப்புறத்திற்கும் இடையில், இருக்கும் அர்த்த மண்டபமானது தங்கத்தால் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோயில் வளாகத்தில் கழிவுப் பொருள் மேலாண்மை, இலவச பொது விநியோகம், ரத்த தான முகாம்கள், கல்வி முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களும்கூட சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணி கோவில் என்பது வேலூர் மையப் பகுதியாக இருப்பதால் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பக்தர்கள் வருகை தரும் 'தங்க தேவியின்' வழிபாட்டுக்கான முக்கிய இடமாகவும், சுற்றுலாத் தலமாகவும் உருவாகியுள்ளது.
இது ஆசியாவிலேயே மிகப் பெரிய பொற்கோயிலாகும்.