பிரபல எழுத்தாளர்கள் - விசித்திர பழக்கங்கள்!

கோவீ.ராஜேந்திரன்

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்கள் பலர் எழுதுவதற்கான "மூட்" மற்றும் செயல்பாடுகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டால் உங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அவற்றில் சில....

மகாகவி பாரதியார் எதை எழுவதற்கு முன்பும் முதலில் "ஓம் சக்தி" என்று எழுதிவிட்டு தான் மற்றதை எழுதத் தொடங்குவார்.

பிரெஞ்சு எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாஸ் எப்போது எழுதினாலும் புதிய பேனாவை கொண்டு தான் எழுதுவார். அதுவும் மூன்று வண்ணத் தாள்களை பயன்படுத்தி எழுதுவார். கவிதை எழுத ஒரு கலர், கதை எழுத ஒன்று, கட்டுரை எழுத ஒன்று.

உலக மகா கவிஞர் ஷெல்லி எப்போது கவிதை எழுதினாலும் ரொட்டி துண்டுகளை மென்று கொண்டே தான் கவிதை எழுதுவார்.

ஜார்ஜ் பெர்னாட்ஷா ஒரு நாளைக்கு 5 பக்கங்களுக்கு மேல் ஒரு வார்த்தை கூட எழுத மாட்டார். கற்பனை தடை பட்டால் உடனே பஸ்ஸில் பயணம் செய்துவிட்டு பின்னர் எழுதுவார்.

நோபல் பரிசை வென்ற எர்னஸ்ட் ஹெமிங்வே எழுத பேனாவை உபயோகிக்க மாட்டார். 20 பென்சில்களை கூராக சீவி வைத்துக் கொண்டு எழுத ஆரம்பிப்பார். முனை உடைந்தால் அவ்வளவு தான் சகுனம் சரியில்லை என்று எழுதுவதை நிறுத்தி விடுவார்.

பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியூகோ தன் வீட்டு வேலைக்காரனிடம். தன் பேன்ட், சர்ட்களை எடுத்துக் கொண்டு போகச் சொல்லி விட்டு, ஆடைகள் இல்லாமல் கதவை மூடிக்கொண்டு எழுதத் துவங்கி ஒரு நாளைக்கு 13 மணிநேரம் எழுதுவாராம்.

பிரபல எழுத்தாளர் ஆஸ்கார் ஒயில்டு எப்போது எழுதினாலும் அறையின் எல்லாக் கதவுகளையும் அடைத்து விட்டு தன்  உடைகளையும் களைந்து விட்டு பிறந்த மேனியுடன் அமர்ந்துதான் எழுதுவாராம்.

அழுகிய ஆப்பிள் பழம் ஒன்றை மேஜை மீது வைத்து அதிலிருந்து வரும் துர்வாடையை நுகர்ந்தபடியே கவிதைகள் எழுதுவார் ஜெர்மன் கவிஞர் ஸகில்வர்.

சார்லஸ் டிக்கன்ஸ் தான் எழுதிய நகைச்சுவையை தானே படித்து விட்டு விழுந்து விழுந்து சிரிப்பாராம். சோகமயமாக எழுதும் போது கண்ணீர் விட்டு அழுது தீர்ப்பாராம்.

அன்டோனி பார்சன் என்ற துப்பறியும் எழுத்தாளர் தொடர்ந்து 2-3 நாளைக்கு எழுதிக்கொண்டே இருப்பார் தூங்கவும் மாட்டார். சாப்பிடவும் மாட்டார். எழுதி முடித்ததும் சாப்பிட்டு விட்டு 2 நாளைக்கு தொடர்ந்து தூங்குவார்.

கவிஞர் பீத்தோவன் கவிதை எழுத மூட் இல்லை என்றால் தண்ணீர் குழாயை திறந்து விட்டு தலையை முழுவதுமாக நனைத்து விட்டு அந்த ஈரத்துடனேயே எழுதுவாராம்.

உலகப்புகழ் பெற்ற நாவலாசிரியர் ஆர். எல். ஸ்டீவன்சன் எழுதிய கதைகரு எல்லாம் அவரின் கனவில் தோன்றியவை.

அயர்லாந்து எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ். எழுத மூட் வருவதற்காக இவர் எப்போதும் குப்புறப்படுத்துக்கொண்டு எழுதும் விநோதப் பழக்கம் உள்ளவர்..

"மிஸஸ் டாலோவே’ என்ற புகழ்பெற்ற நாவலை எழுதிய பெண்ணிய எழுத்தாளர் வர்ஜீனியா வூல்ஃப். எப்போதும் ஓவியர்கள் போல் நின்றபடி எழுதும் விநோதப் பழக்கம் கொண்டவர்.

புகழ் பெற்ற எழுத்தாளர் பால்சாக் எழுதும் போது எப்போதும் பக்கத்தில் மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்க வேண்டும். பகலில் எழுதும் போது கூட!