நான்சி மலர்
கோட்டா பட்டுப்புடவை (Kota silk saree) இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 'கோட்டா' என்னும் இடத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்த புடவைகள் லேசான எடையுடன் இருப்பதால் பெண்களுக்கு கட்டிக்கொள்ள வசதியாக இருக்கும்.
போச்சம்பள்ளி பட்டுப்புடவைகள்(Pochampally silk saree) ஆந்திராவில் உள்ள தெலுங்கானாவில் தயாரிக்கப்படுகிறது. இது சிக்கலான வடிவங்களுக்கும், 'பளிச்' நிறங்களுக்கு பெயர் போனதாகும்.
எடை அதிகம் இல்லாத பட்டுப் புடவையை விரும்பும் பெண்கள் கண்டிப்பாக ஆர்கன்ஸா பட்டுப்புடவையை (Organza silk saree) தேர்வு செய்யலாம். இந்த புடவை மொறு மொறுப்பான தன்மையையும், மென்மையான தோற்றத்தையும் கொண்டிருக்கும்.
பைத்தானி பட்டுப்புடவைகள் (Paithani silk saree) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 'பைத்தான்' என்ற இடத்தில் பல நூற்றாண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. தூய பட்டினைக் கொண்டு மயில், தாமரை போன்ற பாரம்பரிய டிசைன்களை புடவையில் வடிவமைக்கிறார்கள்.
மைசூர் பட்டுப்புடவைகள் (Mysore silk saree) இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற பட்டுப்புடவைகளுள் ஒன்றாகும். இந்த புடவை அதன் மிருதுவான தன்மைக்கு பெயர் போனதாகும். கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் தயாரிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டுப்புடவை (Kanchipuram silk saree) பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக தயாரிக்கப்படுகிறது. இது சிக்கலான ஜரிகை வேலைப்பாட்டிற்கும், அழகிய வண்ணத்திற்கும் பெயர் போனது.
பனாரஸ் பட்டுப்புடவை(Banaras silk saree) உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் தயாரிக்கபடுகிறது. இந்த புடவையில் தங்கம் மற்றும் வெள்ளி நூல்களைப் பயன்படுத்தி கனமான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.
பலுச்சாரி பட்டுப்புடவைகள்(Baluchari silk saree) மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் என்ற இடத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்த புடவைகளில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்து புராணக்கதைகள் இடம் பெற்றிருப்பது இதனுடைய தனி சிறப்பு.
டசர் பட்டுப்புடவையை(Tussar silk saree) பெரும்பாலும் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற இடங்களில் கிடைக்கிறது. சால் மரத்தின் இலைகளை பட்டுப்பூச்சிகள் சாப்பிட்டு உருவாக்கும் டசர் பட்டு இயற்கையாகவே தங்க நிறத்தில் காணப்படுகிறது.
கட்வால் பட்டுப்புடவைகள்(Gadwal silk saree) தெலுங்கானாவில் தயாரிக்கப்படும் மிகவும் புகழ் பெற்ற புடவையாகும். பட்டு மற்றும் பருத்தியை சேர்த்து செய்யப்படுவதால் மிருதுவாகவும், லேசாகவும் இருக்கும். இந்த புடவை கைத்தறி ஜரிக்கு புகழ் பெற்றதாகும்.