வாசுதேவன்
19 ஆம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட இந்தியாவின் தபால் சேவை பற்றி சில தகவல்கள்.
முதல் தபால் நிலையம் மற்றும் முதல் ஜெனரல் போஸ்ட் ஆபீஸ் துவங்கப்பட்டது அன்றைய கல்கத்தா நகரில்தான். நமது நாட்டில் தபால் சேவை அறிமுகப்படுத்தப பாடுபட்டவர்கள் லார்ட் ரபார்ட் கிளைவ், வார்றேன் ஹோஸ்டிங்ஸ்,
லார்ட் டல்ஹவுஸ்ஸி.
1852 ல் பசை கொண்டு ஒட்டப்படும் முதல் தபால் தலை ( adhesive stamp ) அறிமுகப் படுத்தப்பட்டது. அக்டோபர் 1 ஆம் தேதி 1854, ராணி விக்டோரியா உருவம் பதித்த தபால் தலை வெளியிடப்பட்டது.
நவம்பர் 21, 1947 ல் சுதந்திர இந்தியாவின் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் கொடி பொறிக்கப்பட்டு இருந்தது. அதன் மதிப்பு மூன்றரை அனா.
ஆகஸ்ட் 15, 1948 ல் மகாத்மா காந்தி நினைவாக தபால் தலை வெளியிடப்பட்டது. படிப்படியாக பல வகை மதிப்புகள் கொண்ட பல வடிவங்களில் தபால் தலைகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
1879 லேயே போஸ்ட் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டன. அப்பொழுது அதன் மதிப்பு காலனா.
இன்றும் மக்கள் போஸ்ட் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். அதன் மதிப்பு 50 பைசா.
சில வருடங்களுக்கு முன்பு தபால் துறை, புது வகையான போஸ்ட் கார்டு ( innovative post card ) அறிமுகப்படுத்தியது. மதிப்பு 25 பைசாவாகும்.
இன்லான்ட் கார்டு என்ற பச்சை, நீல வண்ண தாளில் விற்பனை செய்யப்படுகின்றன. விலை ரூ 2.50 .
முன்பு எல்லாம் தபால்காரர்கள் ( Post Men ) நகரங்களில் தினமும் மூன்று முறை தபால்கள், மணி ஆர்டர்கள் பட்டுவாடா செய்ய வருவார்கள்.
பல இடங்களில் சிவப்பு வண்ணம் பூசிய தபால் பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன, பொதுமக்கள் பயன்படுத்தினர்.
இரவு 8 மணி வாக்கில் குறிப்பிட்ட இடத்தில் தினமும் தபால்
மொபைல் வண்டி வந்து நிற்கும். ஒரு மணி நேரம் தபால் சேவை வழங்கப்பட்டு வந்தது. பொது மக்கள் அங்கு வந்து அவற்றை பயன்படுத்தி பலன் அடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களிலும் கூட எக்ஸ்பிரஸ் டெலிவரி என்று அழைக்கப்பட்ட தபால் சேவை, வீடுகளுக்கு வந்து பட்டுவாடா முறை ஸ்பெஷலாக இயங்கிக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது மொபைல் வந்தவுடன், தபால் சேவை குறைந்துவிட்டதென்பது குறிப்பிடத்தக்கது.