பிருந்தா நடராஜன்
புடவை கட்டுவது என்றாலே கல்யாணம் அல்லது பண்டிகைகளுக்கு மட்டுமே என்ற நிலை வந்துவிட்டது. சூடிதார் போன்றவை சௌகரியமான உடையாக இருக்கிறது என்கின்றனர்.
ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான ஆடைகள் அணிகின்றனர். அவை அந்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. இந்தியாவின் கலாச்சார அடையாளமாக உள்ளது புடவைதான்.
அதிலும் தமிழ்நாடு, தமிழர்கள் என்றால் புடவைதான் நினைவிற்கு வருகிறது. பல விதவிதமான புடவை வகைகள் இருக்கின்றன.
பெண்களை ஈர்ப்பது காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள்தான். இந்தியாவிற்கே பெருமை தேடித் தந்தது காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள்தான்.
இந்த வெயிலில் கட்டுவதற்கு ஏற்ற காட்டன் புடவைகளும் தமிழ்நாட்டில் ஏராளம் உண்டு.
மதுரை சுங்குடி மிகவும் பிரபலமான ஒன்று. மிக அடர்த்தியாக செய்யப்பட்ட நெசவுகளில் இந்தப் புடவைகள் கட்டுவதற்கு இதமாக இருக்கும்.
மதுரை காட்டன், கோவை காட்டன் புடவைகள் பல விதவிதமாக கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் பாரம்பரிய நிறங்களில் கிடைத்தாலும் இன்று இவற்றின் நிறம் டிசைன்களில் நவீன மாற்றம் தெரிகிறது.
செட்டி நாட்டு புடவைகள் மேல் பெண்களுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. காரைக்குடியில் நெய்யப்பட்ட புடவைகள் பல அழகான டிசைன்களில் வருகிறது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்றது.
கைத்தறி புடவைகள் நம் நாட்டின் அடையாளம். விலை சற்று அதிகமாக இருந்தாலும் நம் தோற்றத்தை எலிகன்டாக காட்ட கைத்தறி புடவைகள் உதவும்.
இப்போது பட்டுப் புடவை போல் தோற்றம் தரும் சில்க் காட்டன் புடவைகளை பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். லைட் வெயிட் ஆகவும் அதிக ஜரிகை போடாமலும் இருப்பதால் பெண்களின் சாய்ஸ் ஆக இருக்கிறது.
அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஈரோடு காட்டன் எடை குறைவாக கட்ட இலகுவாக இருக்கும்.
நெகமம் என்ற இடத்தில் நெய்யப்படும் பருத்தி புடவைகள் தனித்துவம் வாய்ந்தவை.
தமிழகத்தின் பின்னிப் பிணைந்த பாரம்பரிய புடவைகள் இப்படி பல வகைகள் உள்ளன.