ஆர்.பிரசன்னா
பொங்கல் திருநாளில் கரும்பு இல்லாமல் கொண்டாட்டம் முழுமை பெறாது. இனிப்பும், ஆரோக்கியமும் நிறைந்த கரும்பு பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில தித்திக்கும் தகவல்கள்.
கரும்பு இந்தியாவில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. 7ஆம் நூற்றாண்டில் இங்கிருந்து எகிப்து நாட்டிற்கும், பின்னர் ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது.
கரும்புக்கு, ஆலை, தும்பு, இக்கலம், அங்காரிகை, ஈர், இக்கு, வெகுரசம், கணை, வெண்டு, மதுதிருணம், கன்னல், கழை, வேய், புனர்பூசம், வேழம் எனும் வேறு பெயர்களும் உண்டு
தொல்காப்பியமும் இதனைப் 'புல்' எனக் கூறுகிறது.
தொன்றுதொட்டு தமிழ் நாட்டில் வளர்க்கப்படும் கரும்பு, அதியமானின் முன்னோரால் அவர் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது என்று ஒளவையார் கூறுவார்.
அலெக்ஸாண்டர் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்து திரும்பிச் சென்றதும் அவரது நாட்டு மக்களிடம், "இந்தியாவில் இனிப்புச் சுவை கொண்ட நாணல் செடி உள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கரும்பில் செங்கரும்பு, கருங்கரும்பு, நாமக் கரும்பு என்று மூன்று வகைகள் உள்ளன.
இதன் சாறு பித்தத்தைக் குறைக்கிறது. கருப்பஞ்சாற்றைப் புளிக்க வைத்தது 'காடி' என அழைப்பர். இது பசியை உண்டாக்கி ஜீரணத்தை அதிகப்படுத்தும், தாகத்தைக் குறைக்கும்.
கரும்பு சாறுடன் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பருகினால் மலச்சிக்கல் தீரும்.
கரும்பு சாறுடன் இஞ்சி கலந்து உட்கொண்டால், வலிப்பு நோய் குணமாகும்.
100 கிலோ கரும்பில் இருந்து, 10 கிலோ சர்க்கரை எடுக்கலாம்.