பெ. சிவக்குமார்
கிராமப்புற மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள், விழாக்கள், பாரம்பரியம் போன்றவற்றை வாய்வழி பாடல்களாக தலைமுறைகளுக்கு கடத்த, நாட்டுப்புற பாடலை பயன்படுத்தினர். இப்பாடல்கள் எளிய நடையில் மக்களின் உணர்வை பிரதிபலிப்பதாக இருக்கும்.
அழும் குழந்தைக்கு தாய் ஆராரோ சொன்னால் அது தாலாட்டுப்பாட்டு.
நாற்றுநடும் பெண்களின் நாவில் வந்து ஒலிக்கும் குலவைப்பாட்டு.
சந்தைக்கு வண்டி பூட்டி செல்லும்போது வழிநெடுக வண்டிக்காரன் பாட்டு.
கேணியில் நீர் இரைக்கும் போது கேட்டுக் கொண்டிருந்த ஏற்றப்பாட்டு.
காதலனும் காதலியும் அன்பை எடுத்துரைக்கும் எசப்பாட்டு!
பாட்டியின் தெவிட்டாத வரிகளில் தெம்மாங்குப்பாட்டு.
வீதி தோறும் குழந்தைகளின் விளையாட்டுப்பாட்டு.
மாரியம்மன் கோவில் திருவிழாவில் கும்மிப்பாட்டு.
மார்கழி மாதங்களில் பக்தி பஜனைப் பாட்டு.
குமரிப்பெண் சடங்கானால் கூடிப்பாடும் சடங்குப் பாட்டு.
இப்படிப்பட்ட மனிதனுக்கு இயற்கை மரணம் என்றால்... கண்ணீர் பொங்க கவலை ததும்ப மாரில் அடித்துக் கொண்டு பாடும் மாரடிப்பாட்டு.
இவருக்கு ஒப்பாய் எவரும் இல்லை என்று உணர்ச்சி பொங்க இசைக்க ஒரு ஒப்பாரிப்பாட்டு.
பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு வாழ்ந்தவன் எங்கள் தமிழன்!