வித்யா குருராஜன்
பெண்களின் ஃபேவரைட் உடை என்றால் அது புடவை தான். மற்ற உடைகளுக்கும் புடவைக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது... அறிவீர்களா?
மற்ற உடைகளெல்லாம் உடலைத் தனக்குள் பொருந்தச்சொல்லும். ஆனால் புடவை மட்டும் தான் உடலுக்கேற்ப பொருந்தி தனித்துத் தெரியவைக்கும் சக்தி வாய்ந்தது.
புடவைகள் பலவிதம் என்பது உங்களுக்குத் தெரியும். புடவைகளின் பார்டர்களும் பலவிதம் என்று தெரியுமா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
கெட்டி பார்டர் - கெட்டியாக ஜரிகை நெய்யப்பட்டது
ரெட்டைப்பேட் பார்டர் – மேலும் கீழும் ஜரிகை நடுவில் பட்டுத் துணி உள்ளது.
அடை பார்டர் – கையினால் நெய்யப்பட்டது. கைத்தறியில் பெரிய ஊக்குகளால் நெய்யப்படும் ஒருவகை பாரம்பரியமான முறை இது.
ஜக்கார்ட் பார்டர் – ஜக்கார்ட் இயந்திரம் கொண்டு நெய்யப்படுவது. பெரும்பாலும் பொடி ஊசியே பயன்படுத்தப்படும்.
வரிசை பேட் பார்டர் – வரிசையாக அமைந்திருக்கும் பல ஐரிகை கோடுகள் உடையது.
பட்டு பேட் பார்டர் – ஜரிகையே இல்லாமல் வெறும் நூலால் மட்டுமே நெய்யப்படுவது
கால் இறங்கிய பார்டர் – ஜரிகை பார்டர் மேலேறி பார்டருக்குக் கீழே கொஞ்சம் துணி வரும்.
வைர ஊசி பார்டர் – பார்டரில் மெல்லிய ஜரிகை வரிகள் வரும்.
போடி பார்டர் – ஜரிகை இல்லாமல் மேலும் கீழும் வரிகள், நடுவில் துணி என்றிருப்பது.
எட்டுக்கோல் பார்டர் – நின்ற நிலையில் தாழப்பூ வரிகள் நெய்யப்பட்டிருக்கும்.
பிள்ளையார் மூக்கு கோர்வை பார்டர் – டெம்பிள் பார்டர் என்பார்கள். கூம்பான ஒற்றை கோபுரம் போல் இருக்கும்.
தாழம்பூ கோர்வை பார்டர் – தாழம்பூக்கள் வரிசைகட்டி நிற்கும்.
பீட்டு புட்டா பார்டர் - பார்டருக்கு மேலே இடைவெளி விட்டு புட்டாக்கள் நெய்யப்பட்டிருக்கும். இந்த புட்டாக்கள் மாங்காய், அன்னம், வட்டம் என எப்படி வேண்டுமானாலும் இருக்கும்.
புட்டா பார்டர் - இந்த வகையில், பார்டருக்கு உள்ளே இடைவெளி விட்டு புட்டாக்கள் நெய்யப்பட்டிருக்கும்.
கட்டம் பார்டர் - பார்டருக்கு உள்ளே ஜரி கட்டங்களோ நூல் கட்டங்களோ வரும்.
பாலும் பழமும் கட்டம் பார்டர் - பார்டருக்கு உள்ளே பாலும் பழமும் ஸ்டைலில் வண்ண வண்ண கட்டங்கள் வரும்.
முப்பாகம் பார்டர் - புடவை மூன்று பாகங்களாக நெய்யப்பட்டிருக்கும். மேலும் கீழும் ஒரே வண்ணத்திலும் இடையில் உள்ள பாகம் வேறு வண்ணத்திலும் இருக்கும். இதனை நீள பார்டர் புடவை என்றும் அழைப்பர்.
அரைப் பாகம் பார்டர் - பாதிப்புடைவை ஒரு மாதிரியும் மீதி பாதி வேறு மாதிரியும் இருக்கும்.
பார்டர்லெஸ் - பார்டரே இல்லாமல் நெய்யப்படும்.
ஒவ்வொரு வகை பார்டரும் புடவைக்கு ஒவ்வொரு வகையான தோற்றத்தினைத் தரும். இனிமேல் கலர், டிசைன் மட்டும் பார்க்காமல், பார்டர் ஸ்டைலையும் பார்த்து புடவை செலக்ட் பண்ணுங்களேன்!