ஆர்.ஜெயலட்சுமி
பவானி ஜமுக்காளங்கள் என்றும் காலத்தால் அழியாதவை. பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றுபவை. பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் ஜமுக்காளம் இருக்கும்.
தமிழ்நாட்டில் ஜமுக்காளத்திற்குப் பெயர் பெற்ற ஊர் பவானி ஆகும். பவானி என்ற ஊர் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும்.
பவானியில் இரு வகையான ஜமுக்காளங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒன்று பருத்தி நூல்களைக் கொண்ட விரிப்புகள். மற்றொன்று செயற்கை பட்டு நூல்களைக் கொண்ட ஜமுக்காளங்கள் ஆகும்.
பருத்தி, கம்பளி, செயற்கைப்பட்டு போன்றவற்றைப் பயன்படுத்தி பவானியில் ஜமுக்காளம் தயாரிக்கப்படுகிறது.
கண்களைக் கவரும் வண்ணம், நீடித்த உழைப்பு, தரமிக்க வேலைப்பாடு போன்றவையே பவானி ஜமுக்காளத்தின் பெயருக்கும் புகழுக்கும் காரணம்.
குழித்தறி முறையில் சைசுக்கு ஏற்ப இரண்டு மூன்று பேர் சேர்ந்து ஒரு ஜமுக்காளத்தை நெசவு செய்கிறார்கள்.
ஜமுக்காளத்தின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு நூலை வீசி வீசி கையாலேயே நெய்வதை பார்க்கையில் நமக்கே மூச்சிரைத்துப் போகும்.
பச்சை, மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு, சிகப்பு, பிரவுன், ஊதா என ஜமுக்காளங்கள் இந்த ஏழு கலர்லதான் பாரம்பரியமாக செய்யப்படுகின்றன.
தரை விரிப்புகள் அல்லது படுக்கை விரிப்புகள் என்று சொல்லப்படும் ஜமுக்காளம் மிகவும் தடிமனாக இருக்கும். வண்ண வண்ண நிறங்களில் கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடுகளுடன் அழகாக இருக்கும்.
சாயம் நெசவு வடிவமைப்பு எல்லாம் ஒரு கைவினை மரபை பின்பற்றி தயாரிக்கப்பட்டு தரமான வடிவமைப்பைக்கொண்டிருக்கும்.
ஒரு பவானி ஜமுக்காளம் வாங்கினால் குறைந்தது இருபது வருஷம் வரை உழைக்கும்.
இன்றைக்கும் தாம்பூலம் மாற்றிக்கொண்டு நிச்சயம் செய்வதில் ஆரம்பித்து திருமணம், வளைகாப்பு, காதுகுத்து, ஊர் கிராமப் பஞ்சாயத்து, கோயில் திருவிழாக்கள், கிராம சபை என தமிழர்களின் சுபக் காரியங்கள் அனைத்திலும் இந்த ஜமுக்காளமானது தவிர்க்கமுடியாத ஒரு பண்பாட்டு அம்சமாக இருக்கிறது.
பவானியில் தயாரிக்கப்படும் ஜமுக்காளமானது சுவீடன், ஜெர்மனி, இத்தாலி, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பவானியில் தயாரிக்கப்படும் பட்டுப் பார்டர் ஜமுக்காளங்கள் மிகவும் புகழ்பெற்றவை. இந்த பட்டு ஜமுக்காளங்களில் பெயர், கடவுளின் உருவங்கள், பிரமுகர்களின் உருவங்கள், இயற்கை காட்சிகள் போன்றவை கையாலயே நெய்து தரப்படுகின்றன.
இந்திய அரசு 2005 மற்றும் 2006ம் ஆண்டுகளில் பவானியில் புவியியல் சார்ந்த குறியீடாக அங்கீகரித்தது.
பவானி ஜமுக்காளங்கள் என்றும் காலத்தால் அழியாதவை. பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றுபவை.