கே.எஸ்.கிருஷ்ணவேனி
காபித்தூள் நீண்ட நாட்கள் மணம் மாறாமல் இருக்க, அவற்றை வாங்கி வந்ததும் டப்பாவில் கொட்டாமல் கவருடனயே டப்பாவில் வைத்து உபயோகிக்கலாம். வாசனை போகாமல் நீண்ட நாட்களுக்கு மணமாக இருக்கும்.
வெங்கல உருளியில் அரிசி உப்புமாவும், ஈயப் பாத்திரத்தில் ரசமும், மண்சட்டியில் தயிர் தோய்க்கவும், கல் சட்டியில் வத்தக் குழம்பும் செய்ய மிகவும் ருசியாக இருக்கும்.
சமைக்கும்போது சில சமயம் தேங்காய்த் துருவல் மீந்து விடும். அவற்றை அப்படியே வைத்தால் பிசுபிசுப்பு தட்டி விடும். எனவே வாணலியில் போட்டு லேசாக வதக்கி எடுத்து வைக்க இரண்டு மூன்று நாட்கள் வரை உபயோகிக்கலாம்.
குழம்பு, ரசத்தில் புளிப்பு அதிகமாகிவிட்டால் சிறிதளவு காரப் பொடி மற்றும் வெல்லம் ஒரு துண்டு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்க சரியாகிவிடும்.
தினம் குழம்புதானா என்று அலுத்துக் கொள்பவர்களுக்கு ஒரு நாள் மோர்க் குழம்பு, மறுநாள் துவையல், அடுத்த நாள் வறுத்தரைத்த சாம்பார், வத்தக் குழம்பு, காரக்குழம்பு, பிட்லை என வெரைட்டி காட்டலாம்.
எண்ணெய்களை அதிக நாட்கள் வைத்திருந்தால் காரவாடை வரும். இதற்கு நல்லெண்ணெய் என்றால் ஒரு சிகப்பு மிளகாய் போட்டு வைக்கலாம். தேங்காய் எண்ணெய் என்றால் ஐந்தாறு மிளகுகளை போடலாம்.
ஒரே மாதிரி தோசை தினமும் செய்தால் அலுத்து விடும். ஒரு நாள் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, 2 பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து அரைத்து தோசை மாவில் கலந்து தோசை செய்யலாம். மறுநாள் தக்காளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து கலந்து செய்யலாம். அடுத்த நாள் கொத்தமல்லி, பீட்ரூட், கேரட் என தினம் ஒன்றாக அரைத்து சேர்த்து கலக்கலாக தோசை செய்யலாம்.
எந்த சிப்ஸ் செய்வதாக இருந்தாலும் எண்ணெயில் வறுக்கும் பொழுதே தேவையான உப்பை சிறிது நீர் கலந்து தெளித்து வறுத்து எடுக்க, உப்பு எல்லா இடத்திலும் சமமாக பரவி இருக்கும். வெளியில் எடுத்ததும் காரப்பொடி சிறிது சேர்த்து குலுக்கி விட ருசியான சிப்ஸ் தயார்.
டபுள் பீன்ஸ், ராஜ்மா, மொச்சை போன்ற பருப்புகளை வேகவிடும்போது உப்பு சேர்க்காமல் வேகவிட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.
பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, காராமணி போன்ற பயறு வகைகளில் வண்டு வராமல் இருக்க பூண்டு ஐந்தாறு பல் அல்லது வசம்பு துண்டு ஒன்றை போட்டு வைக்கலாம்.