கல்கி டெஸ்க்
நகைகள் வாங்குவது என்பது யாருக்குத்தான் பிடிக்காது. 'நகையைக் கூட வாங்கிவிடலாம், ஆனால் அதனைப் பாதுகாப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது என்று கவலை கொள்கிறீர்களா?' அப்போது இது உங்களுக்குதான்...
உடைகள், மேக்-அப் மற்றும் சென்ட், பாடிஸ்பிரே போன்றவற்றைப் போட்டுக்கொண்டு அதன்பின் நகைகளை அணிந்துகொள்ளுங்கள். சென்ட், ஸ்பிரேயில் உள்ள ரசாயனப் பொருட்கள், நகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
வீடு திரும்பியதும் முதலில் நகைகளைக் கழற்றி வைத்துவிட்டு, அதன்பின் மேக்-அப்பை கலைக்க வேண்டும்.
நகைகளை சோப்புத் தண்ணீருக்குப் பதிலாக சோப்நட் (பூங்காங்கொட்டை) பயன்படுத்தி சுத்தம் செய்வது நல்லது.
பூங்காங்கொட்டையைத் தண்ணீரில் ஊறவைத்தால் நுரைத்துக்கொண்டு வரும். அதில் நகைகளை ஊறவைத்து, அலசி சுத்தம் செய்யலாம்.
காதில் அணியும் மாட்டல் வாங்கும்போது சரியான நீளத்துக்கு வாங்குங்கள். நீளம் குறைவாக இருந்தால், காதின் கீழ்ப்பகுதி மடங்கும். நீளமாக இருந்தால், வளைந்து கீழே தொங்கும். காதணிக்கு சப்போர்ட் கிடைக்காது.
பாதுகாப்புக்காக வங்கி லாக்கரில் நகைகள் வைக்கும்போது மரத்தாலான பெட்டிக்குள் நகைகளைப் போட்டு வைத்தால், நகைகள் பொலிவு இழக்காமல் இருக்கும்.
முத்து மிகவும் மிருதுவானது என்பதால் முத்து பதித்த நகைகளை வைரம் மற்றும் தங்க நகைகளுடன் சேர்த்து வைக்கக்கூடாது.
பிளாட்டினம் 95% தூய்மையானது என்பதால் சரும அலர்ஜி உள்ளவர்கள்கூட பிளாட்டினம் நகைகளை அணியலாம். (தங்க நகைகள் மாதிரி) தொடர்ந்து அணிவதால் இவை தேய்மானம் அடைவதில்லை.
வெள்ளி நகைகள், பாத்திரங்களை இரும்பு பீரோவில் வைக்காதிருப்பது நலம்.
நெற்றிச்சுட்டி வாங்கும்போது, செயின் பகுதியில் ஒரு சிறு கிளிப் இருக்கும்படி வாங்கவும். அந்த கிளிப் நெற்றிச்சுட்டி ஆடாமல் அழகாய் பொருந்த உதவும்.